2018-05-25 16:00:00

திருத்தந்தை : பல்கேரியா, மாசிடோனியா பிரதமர்கள் சந்திப்பு


மே,25,2018. பல்கேரியப் பிரதமர், Boyko Borissov, மாசிடோனியப் பிரதமர் Zoran Zaev ஆகிய இருவரையும், வத்திக்கானில், இவ்வெள்ளிக்கிழமை முற்பகலில், தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்திற்கும், பல்கேரியா, மாசிடோனியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், இந்நாடுகளில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் கல்வி, நலவாழ்வு மற்றும் சமூகநலப்பணிகள் போன்றவை, இச்சந்திப்பில் இடம்பெற்றன என, திருப்பீட செய்தி தொடர்பகம் கூறியது. 

இச்சந்திப்பில், பல்கேரிய பிரதமர், திருத்தந்தையை தன் நாட்டுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கும் கடிதத்தையும் வழங்கியுள்ளார்.

தென்கிழக்கு ஐரோப்பாவில், பால்கன் தீபகற்பத்தில் அமைந்துள்ள முன்னாள் யுக்கோஸ்லோவியாவைச் சேர்ந்த மாசிடோனியா, 1991ம் ஆண்டில் தனி நாடானது. மேலும், கருங்கடலுக்கு கிழக்கே அமைந்துள்ள பால்கன் பகுதி நாடான பல்கேரியா, ஐரோப்பாவின் 16வது பெரிய நாடாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.