2018-05-26 16:05:00

Centesimus Annus கருத்தரங்கில் முதுபெரும்தந்தை பர்த்தலமேயோ


மே,26,2018. கிறிஸ்தவக் கோட்பாடுகள் மட்டுமே, சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் மற்றும் அரசியல் சார்ந்த தீமைகளைக் குணமாக்க முடியும் என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலமேயோ அவர்கள் உரையாற்றினார்.  

“Centesimus Annus – Pro Pontifice” என்ற பாப்பிறை அமைப்பு நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில், இச்சனிக்கிழமை காலையில் உரையாற்றிய, முதுபெரும்தந்தை பர்த்தலமேயோ அவர்கள், “பொதுவான நன்மைக்கு, ஒரு பொதுவான கிறிஸ்தவத் திட்டம்” என்ற தலைப்பில் தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

“புதிய அரசியல் மற்றும் டிஜிட்டல் உலகில் வாழ்வுமுறை” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உரையாற்றிய, முதுபெரும்தந்தை பர்த்தலமேயோ அவர்கள், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமுதாயம் மற்றும் அரசியல் ஆகிய தலைப்புகளில் விரிவாக தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இப்பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்ற தன்னை அழைத்ததற்கு முதலில் நன்றி தெரிவித்த முதுபெரும்தந்தை அவர்கள், நாம் கடும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறோம் மற்றும் சமூகத்தில் அது ஏற்படுத்தும் விளைவு, உலக அளவில் தெரிகின்றது என்று கூறினார்.

மனநிறைவை அளிக்காத தேவைகளை அதிகம் உருவாக்குவதன் வழியாக, மனித சமுதாயத்தின் ஆன்மீகப் பாரம்பரியம் அழிந்துகொண்டு வருகிறது என்றும், சமூக நீதி, திருமண முறிவு, வன்முறை, குற்றங்கள், தனிமை, சமயவாதம், மோதல்கள் போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தொழில்நுட்பம் திறனற்றது என்பதை நிரூபித்துள்ளது என்றும் உரைத்தார் முதுபெரும்தந்தை.

சுதந்திரம், நீதி மற்றும் அமைதிக்கான நம் அர்ப்பணத்தை, விசுவாசம் விரிவாக்குகின்றது என்றுரைத்த முதுபெரும்தந்தை, ஒருமைப்பாட்டுணர்வை நடைமுறைப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பை இக்காலத்தின் நிலைமை அளிக்கின்றது எனத் தெரிவித்தார்.     

நம் வருங்காலம் என்பது, எதை வைத்திருக்கின்றோம் என்பதில் அல்ல, மாறாக, எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதிலும், தன்னலக்கோட்பாட்டியலில் அல்ல, மாறாக பகிர்வதிலும் அமைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார், முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலமேயோ

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.