2018-05-26 14:40:00

இமயமாகும் இளமை - சூரிய மணிக்காட்டிக்கு கூரை அமைப்பதுபோல்...


ஒரு நாட்டின் பழங்குடியினரிடையே மறைபரப்புப் பணியாற்றிவந்த ஓர் அருள்பணியாளர், விடுமுறைக்கு, தன் தாயகம் திரும்பிச் சென்றார். அங்கு அவர் 'சூரிய மணிகாட்டி' (Sun dial) என்ற அற்புதப் படைப்பைக் கண்டார். அதன் பயனை, தன் மக்கள் புரிந்து, பயன்படுத்தவேண்டும் என்ற ஆவலுடன், அருள்பணியாளர், தன் விடுமுறை முடிந்து திரும்பும்போது, சூரிய மணிகாட்டி ஒன்றை வாங்கிச் சென்றார்.

அவர் கொண்டுவந்திருந்த சூரிய மணிகாட்டியைக் கண்ட பழங்குடியினர், ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தனர். அவர்களுக்கு அந்த மணிகாட்டியினை எவ்விதம் பயன்படுத்துவது என்பதை விளக்கிக் கூறினார். சூரிய மணிகாட்டியின் பயனை, தன் மக்கள் புரிந்துகொண்டனர் என்ற மகிழ்வில், அருள்பணியாளர், அதை அவ்வூருக்கு நடுவே ஒரு பொதுவான இடத்தில் பொருத்தி வைத்தார்.

அடுத்தநாள் காலை, அருள்பணியாளர் அவ்விடம் சென்றபோது அதிர்ச்சி அடைந்தார். அவ்வூர் மக்கள், சூரிய மணிக்காட்டிக்கு மேலே கூரை ஒன்றை அமைத்திருந்தனர். வெயில், மழை இவற்றால் சூரிய மணிகாட்டி பாதிக்கப்படாமல் காக்கும்பொருட்டு அந்தக் கூரையை அமைத்ததாக, அம்மக்கள், அருள்பணியாளரிடம் கூறினர்.

கருவிகளால் சூழப்பட்டிருக்கும் இளைய தலைமுறையினர், அக்கருவிகளின் பயன்பாட்டை உணர்ந்து, அவற்றைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு மாறாக, அவற்றை பீடமேற்றி வழிபடுவது ஆபத்து.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.