2018-05-28 16:58:00

ஆப்ரிக்காவுக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு


மே,28,2018. இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், ஆப்ரிக்காவின் சொமாலியா நாட்டில், கிறிஸ்தவ விசுவாசத்திற்காக மறைசாட்சிய வாழ்வை எதிர்கொண்ட இத்தாலிய மறைபோதக அருள்சகோதரி ஒருவரை நினைவுபடுத்தி, ஆப்ரிக்கக் கண்டத்தில் அமைதி நிலவ, நன்மனம் கொண்ட அனைவரும் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய மூவொரு கடவுள் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடம் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 26, இச்சனிக்கிழமையன்று, முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட அருள்சகோதரி Lionella Sgorbat அவர்கள் பற்றி கூறினார்.

கொன்சோலாத்தா மறைபோதக சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Lionella Sgorbat அவர்கள், 2006ம் ஆண்டில், சொமாலியா நாட்டின் மொகதிஷு (Mogadishu) நகரில் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டார் என்றுரைத்த திருத்தந்தை, இச்சகோதரி, ஆப்ரிக்காவில் தன் வாழ்வை நற்செய்திக்கும், ஏழைகளுக்கும் பணியாற்றுவதற்கு தன்னை அர்ப்பணித்திருந்தார் என்று கூறினார். முத்திப்பேறுபெற்ற இச்சகோதரியின் மறைசாட்சிய வாழ்வு, ஆப்ரிக்கா மற்றும் உலகம் முழுவதற்கும் நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது என்றும், நாம் எல்லாரும் இணைந்து, ஆப்ரிக்காவுக்காகச் செபிப்போம் என்றும் திருத்தந்தை விண்ணப்பித்தார்.

வட இத்தாலியின் பியாச்சென்சா நகருக்கு அருகிலுள்ள ஒரு சிறிய ஊரில் 1940ம் ஆண்டில் பிறந்த அருள்சகோதரி Lionella Sgorbat அவர்கள், 1963ம் ஆண்டில் கொன்சோலாத்தா மறைபோதக சபையில் சேர்ந்தார். 2006ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள், மொகதிஷு நகரில் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.