2018-05-30 17:02:00

அமைதி, வெற்றியைவிட மிகவும் மதிப்புமிக்கது


மே,30,2018. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதன் காலையில் நடைபெற்ற பொதுமறைக்கல்வியுரையின்போது, Taekwondo கூட்டமைப்பின் கொரிய விளையாட்டு வீரர்கள் குழு ஒன்று, திருத்தந்தையின் முன்னிலையில் சிறிய கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் காட்டியது.

தென் கொரியா மற்றும் வட கொரிய நாடுகளைச் சேர்ந்த இந்தக் குழு, அமைதியை ஊக்குவிக்கும் விதமாக, கராத்தே போன்ற விளையாட்டு நிகழ்வை நடத்திக் காட்டியது. அந்நிகழ்வின் இறுதியில், அமைதியின் அடையாளமாக, வெள்ளைப் புறா ஒன்றை பறக்கவிட்டது இக்குழு.

அமைதி, வெற்றியைவிட மிகவும் மதிப்புமிக்கது எனப் பொருள்படும் நீண்ட விளம்பரம் ஒன்றையும், இவ்விரு கொரிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தாங்கியிருந்தனர். இந்நிகழ்வின் இறுதியில் இவர்கள், திருத்தந்தையைச் சந்தித்து ஆசீரும் பெற்றனர்.

 

அச்சமயத்தில் அவர்களிடம் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வுக்கு நன்றிகூறியதுடன், இரு கொரிய நாடுகளின் வீரர்கள் இணைந்து நடத்திய இந்நிகழ்வு, அமைதிக்கான ஆவலை வெளிப்படுத்துவதாய் உள்ளது என்றும், இது மனித சமுதாயம் முழுவதற்கும் அமைதியின் செய்தியாக உள்ளது என்றும் கூறினார்.

மேலும், தூய ஆவியார் பிரசன்னமாய் இருக்கும்போது, ஏதாவது ஒன்று எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. எங்கே ஆவியானவர் செயல்படுகின்றாரோ, அங்கே காரியங்கள் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இப்புதன்கிழமையன்று வெளியாயின.

கொரியாவின் Taekwondo கூட்டமைப்பு, கராத்தே போன்ற, கொரிய இராணுவ கலைகளைக் கொண்டது. இது, 1940 மற்றும் 1950களில் கொரியாவில் வளர்ச்சியடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.