2018-05-30 17:17:00

ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் வரலாற்றை விவரிக்கும் நூல்கள்


மே,30,2018. ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் வரலாறு மற்றும் கலாச்சாரங்களை விவரிக்கும் நூல்கள், வத்திக்கான் அருங்காட்சியகத்தில் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.

வத்திக்கான் அருங்காட்சியகம் மற்றும் ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் பற்றிய ஆய்வகப் பதிப்பகத்தின் உதவியுடன், வத்திக்கான் அருங்காட்சியகத்தின் Anima Mundi என்ற பிரிவில், இத்தாலியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய பூர்வீக மக்களால், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட நூல்கள் முதல், ஏறக்குறைய 300 நூல்கள் தற்போது, வத்திக்கான் அருங்காட்சியகத்தில் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், உலகில் பல்வேறு கலாச்சாரங்களில் திருஅவை மறைப்பணியாற்றிய இடங்களிலிருந்து பொருள்கள் உரோமைக்கு அனுப்பப்பட வேண்டுமென, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார். ஏனெனில், ஐரோப்பாவில் மட்டுமே கலாச்சாரம் உண்டு என்ற பாசிச உணர்வு, 1920கள் மற்றும் 1930களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் வளர்ந்ததால், உலகெங்கும் நிலவுகின்ற கலாச்சாரங்களை வெளிக்கொணர்வது முக்கியம் என உணர்ந்த அத்திருத்தந்தை இவ்வாறு கட்டளையிட்டார்.

ஆஸ்திரேலியாவில் Aboriginal மற்றும் Torres பகுதி மக்கள், 65 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும், ஆஸ்திரேலியாவிற்கு பிரித்தானியர்கள் சென்ற 1788ம் ஆண்டில், அக்கண்டத்தில் 300 பூர்வீக இனப் பகுதிகள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.