2018-05-30 16:30:00

இமயமாகும் இளமை.......: முன்னாள் குழந்தை தொழிலாளர்கள் சாதனை!


குடும்பச் சூழலின் காரணமாக குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கும் மேல் எடுத்து சாதனை படைத்துள்ளனர். குழந்தைகளை தொழிலாளர்களாக அமர்த்தக் கூடாது என அரசும் பலதரப்பட்ட அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், குடும்ப சூழல், வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனினும், தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக உள்ள சிறாரை மீட்டு, அவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் பனியன் நிறுவனங்களில் மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்குச் சென்ற எட்டுப் பேர், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின்கீழ் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அவர்கள் பள்ளியில் கல்வி கற்கவும் அனுப்பப்பட்டனர். அதில் இந்த ஆண்டு குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதிய எட்டு மாணவர்களும் தேர்ச்சியடைந்து உள்ளனர். தரணிதரன் என்ற மாணவர், 1093 மதிப்பெண்கள் பெற்று சாதனையே படைத்துள்ளார். அதேபோல மற்ற மாணவர்களும் நல்ல மதிப்பெண்களை எடுத்து உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.