2018-05-31 15:54:00

உலக புகையிலை எதிர்ப்பு தினம், மே 31


மே,31,2018. புகையிலையைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் வழியாக, இதய நோய், பக்கவாதம் போன்ற மரணத்தை வருவிக்கும் நோய்களிலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற செய்தி பரப்பப்பட வேண்டுமென, ஐ.நா.வின் நலவாழ்வு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மே 31, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள, WHO எனப்படும், உலக நலவாழ்வு நிறுவனம், புகையிலையைப் பயன்படுத்துவது மற்றும், அந்தப் புகைகளைச் சுவாசிப்பதால் ஏற்படும் இதய நோய்களால், ஒவ்வோர் ஆண்டும் முப்பது இலட்சம் பேர் வீதம் இறக்கின்றனர் என எச்சரித்துள்ளது.

வருவாய் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது என்றும், இந்நோய்களால் ஏற்படும் இறப்புகளை தடுத்து நிறுத்த முடியும் என்றும், WHO நிறுவனத்தின் மருத்துவர் Douglas Bettcher அவர்கள் கூறியுள்ளார்.

WHO நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, உலகில், ஏறத்தாழ 110 கோடிப் பேர் புகைப்பிடிக்கின்றனர் எனவும், இந்நூற்றாண்டு ஆரம்பித்தபோது, இதே எண்ணிக்கையே இருந்தது எனவும் தெரியவந்துள்ளது.

WHO நிறுவனத்தின் 194 உறுப்பு நாடுகளும், புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், சிகரெட்டில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வேதியப்பொருள்கள் உள்ளன என்றும், புகையிலை பயன்படுத்துவோரில் 90 விழுக்காட்டினருக்கு வாய் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது என்றும், பல் சிகிச்சை நிபுணர் ஜெ.கண்ணபெருமான் அவர்கள் மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.