2018-06-02 14:41:00

இந்தியாவில் குழந்தை கடத்தல் அதிகரிப்பு


ஜூன்,02,2018. இந்தியாவில் பெண் குழந்தைகள் கடத்தல் நிகழ்வும், மீட்கப்படாத சிறுமிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலை தருவதாக உள்ளது என, மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.

அகில இந்திய அளவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் முறையில் துன்புறுத்தலைச் சந்தித்து வருவதாகவும், கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக, ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 958 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன எனவும், கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகம் எனவும், ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இதில் 54 ஆயிரத்து 723 வழக்குகள் குழந்தை கடத்தல் சம்பவங்களுக்காகவும், 36 ஆயிரத்து 22 வழக்குகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்காகவும் பதிவாகியுள்ளன என, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

இருபது இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழும் சென்னை, கோவையை உள்ளடக்கிய 19 பெருநகரங்களில், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக, கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 16 ஆயிரத்து 984 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் டெல்லி முதலிடத்திலும்(7392), மும்பை இரண்டாமிடத்திலும்(3400), பெங்களூரு(1333) மூன்றாமிடத்திலும் உள்ளன எனச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : தி இந்து /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.