2018-06-04 16:59:00

திருநற்கருணை, தன்னல எண்ணங்களைச் சுட்டெரிக்கின்றது


ஜூன்,04,2018. கிறிஸ்துவின் திருஉடல் மற்றும் திருஇரத்தம் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணை, நம் தன்னல எண்ணங்களைச் சுட்டெரித்து, இயேசுவோடு முழுமையாய் நம்மை ஒன்றிணைக்கின்றது என்று கூறினார்.

கிறிஸ்துவின் திருஉடல் மற்றும் திருஇரத்தம் பெருவிழா, கிறிஸ்துவின் பேருண்மையில் வாழ்வதற்கு நம்மை அழைத்துச் சென்று, அவரில் நம்மை மாற்றுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவின் திருஉடல் மற்றும் திருஇரத்தத்தால் நாம் ஊட்டம் பெறுவதால், அவரின் அன்பைப் பெற்று, அதை நமக்கென்றே வைத்துக்கொள்ளாமல், மற்றவரோடு பகிர்ந்துகொள்கிறோம் என்று கூறினார்.

கடவுளின் அன்பைப் பெறுகையில், அவரின் திட்டம் உலகில் பிரசன்னமாக இருப்பதற்கு நம்மை உந்தித் தள்ளுகின்றது என்றும், வாழ்வில் தனிமையிலும், புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் வாழ்வோரை நாம் வரவேற்கின்றோம் என்றும், திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்துவின் திருஉடல் மற்றும் திருஇரத்தம் பெருவிழா ஞாயிறன்று, பல இடங்களில் பாரம்பரியமாக, திருநற்கருணை பவனிகள் நடைபெறுகின்றன என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பவனிகள், இறந்து உயிர்த்த இயேசு கிறிஸ்து, உலகின் பாதைகளில் தொடர்ந்து நடக்கின்றார் மற்றும், நம்மோடு சேர்ந்து நம் பாதையை வழிநடத்துகின்றார் என்பதன் மிகச் சிறந்த அடையாளங்களாக உள்ளன என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.