2018-06-05 15:35:00

குவாத்தமாலா எரிமலை விபத்தில் பலியானவர்களுக்கு செபம்


ஜூன்,05,2018. மத்திய அமெரிக்க நாடாகிய குவாத்தமாலாவில் Fuego எரிமலை வெடித்ததில், பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன், தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

குவாத்தமாலா திருப்பீடத்தூதர் பேராயர் Nicolas THEVENIN அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ள அனுதாபத் தந்திச் செய்தியில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, திருத்தந்தையின் செபமும், ஆறுதலும், ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஓய்வின்றி வேலைசெய்யும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களை ஊக்குவித்துள்ள திருத்தந்தை, காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, ஒருமைப்பாடு, ஆன்மீக நெருக்கம், கிறிஸ்தவ நம்பிக்கை ஆகிய ஆண்டவரின் அனைத்துக் கொடைகளும் வழங்கப்படுமாறு செபித்துள்ளார்.

குவாத்தமாலா நாட்டின் தலைநகரான குவாத்தமாலாவுக்கு ஏறத்தாழ முப்பது மைல் தூரத்திலுள்ள Volcan de Fuego அல்லது நெருப்பு எரிமலை எனப்படும் மலை இஞ்ஞாயிறன்று வெடித்து, ஏராளமான புகை, பாறைகள், காற்றில் வாயு, நெருப்புக்குழம்பு போன்றவற்றை வெளியேற்றி வருகின்றது. இதில் ஏறத்தாழ 69 பேர் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் மண்ணுக்குள் சிக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர் எனச் சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.