சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம்:முதல் 3 நூற்றாண்டுகளில் திருஅவை 2

ஆதிகால கிறிஸ்தவர்கள் - RV

06/06/2018 13:09

ஜூன்,06,2018. இயேசுவின் திருத்தூதர்களின் போதனைகளையுபம், சான்றுகளையும், அவர்கள் ஆற்றிய அற்புதங்களையும் கண்ட மக்கள் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டனர். நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கைமுறை என, திருத்தூதர் பணிகள் நூல் பிரிவு 2ல் (தி.ப.2,42-47) இவ்வாறு நாம் வாசிக்கிறோம். அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும், தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.

உலகில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலத்தில், கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோரை தங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்கு, பேரரசர்களும், அவர்களின் அதிகாரிகளும் செய்வதறியாது, கிறிஸ்தவர்களைச் சித்ரவதைப்படுத்தி கொலை செய்தனர். தற்போதைய துருக்கி நாட்டிலுள்ள பித்தினியா (Bithynia) மாநிலத்தின் உரோமை ஆளுனர் பிளினி (Pliny) என்பவர், கி.பி.112ம் ஆண்டில், உரோமையில் இருந்த பேரரசர் த்ரஜானுக்கு (Trajan), "கிறிஸ்தவப் பிரச்சனை" என்ற தலைப்பில், ஆலோசனை கேட்டு ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதம் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

பலரின் பெயர்கள் கொண்ட ஓர் ஏட்டை யாரோ வெளியிட்டுள்ளனர். கிறிஸ்தவர்களாக இருந்து அதை மறுதலித்தவர்கள், நான் சொல்லச் சொல்ல வார்த்தைகளைச் சொல்லி, பேரரசராகிய உமது உருவத்திற்கும்,  நம் கடவுள்கள் சிலைகளுக்கும் தூபமும், திராட்சை இரசமும் இட்டனர். அதேநேரம் கிறிஸ்துவை பழித்துரைத்தனர். இவர்கள் உண்மையிலேயே கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என நினைக்கிறேன். ஆனால், கிறிஸ்தவர்கள் என்று இனம் காட்டப்பட்ட ஏனையோர், கிறிஸ்தவர்களாக இருந்தோம், ஆனால் எனது கட்டளைக்குப்பின் விட்டுவிட்டோம் என்று சொல்கிறார்கள். இவர்களும், உமது உருவத்தையும்,  நம் கடவுள்கள் சிலைகளையும் வணங்கி, கிறிஸ்துவை பழித்துரைத்தனர். எனினும், இவர்கள் செய்த தவறு என்னவெனில், ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் கதிரவன் உதிக்கும் முன்னர்கூடி, கிறிஸ்துவை கடவுளாகப் போற்றி பாடியுள்ளனர். தங்களை வாக்குறுதிகளால் பிணைத்துள்ளனர். இவர்கள் எந்தவிதமான குற்றமும் புரியவில்லை. ஊழல் செய்யவில்லை. திருடவில்லை. விபசாரம் செய்யவில்லை. தங்கள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்தனர். இந்தக் கிறிஸ்தவர்கள், ஒன்றாய்க்கூடி செபித்தபின்னர்,  உணவுக்காக மீண்டும் கூடுகின்றனர். அந்த உணவு, சாதாரண, சுத்தமான உணவாகும். இதைக்கூட அவர்கள் விட்டுவிடுவதாகச் சொல்கிறார்கள்.  நான் கழகங்களைத் தடை செய்துள்ளேன். ஆனால் உண்மை என்னவென அறிவதற்காக, திருத்தொண்டர்கள் என சொல்லப்பட்ட இரு பெண் அடிமைகளை, சித்ரவதைக்கு உள்ளாக்கினேன். ஆனால் இக்கிறிஸ்தவர்களிடம் நான் எக்குற்றத்தையும் காணவில்லை.

உரோமைப் பேரரசின் ஆளுனர்கள், தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் மீது எவ்வித குற்றமும் காண முடியாத நிலையில்தான் இருந்திருக்கின்றனர். முதல் சில நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் பற்றி ஆய்வு செய்த சமூகவியலாளர் Rodney Stark அவர்கள் இவ்வாறு சொல்கிறார். கிரேக்க-உரோமைய உலகத்தில் நிலவிய துன்பம், குழப்பம், கலவரம், அச்சம், சித்ரவதைகள் ஆகியவற்றுக்குப் பதிலளிக்கும் உயிர்த்துடிப்புள்ள இயக்கமாக  கிறிஸ்தவம் பணியாற்றியுள்ளது. கிரேக்க-உரோமைய நகரங்களில் நிலவிய பிரச்சனைகளுக்கு பதில்கூறும் முறையில், புதிய விதிமுறைகளை வழங்கி, புதிய சமூக உறவுகளுக்கு வழியமைத்துள்ளது கிறிஸ்தவம். நகரங்களில் வீடற்றவர்களும், கடும் ஏழைகளும் நிறைந்திருந்தனர். இவர்களுக்கு கிறிஸ்தவம் பிறரன்புப் பணிகள் ஆற்றி, வாழ்வு மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அக்காலத்தில் நகரங்கள், புதிய மனிதர்கள் மற்றும் அந்நியர்களின் வருகையாலும்,  அநாதைகள் மற்றும் கைம்பெண்களாலும் நிறைந்திருந்தன. அவர்களுக்கு கிறிஸ்தவம் உடனடி உதவிகளை வழங்கி, புதிய மற்றும் விரிவடைந்த குடும்ப உணர்வை அளித்தது. நகரங்கள், இனங்களுக்கிடையேயான வன்முறை மோதல்களால் பாதிக்கப்பட்டிருந்தன. அந்நிலையில் கிறிஸ்தவம், சமூக ஒருமைப்பாட்டிற்காக புதிய அடித்தளமிட்டது. நகரங்கள், கொள்ளை நோய்களையும், நிலநடுக்கங்களையும் எதிர்கொண்டன. கிறிஸ்தவம் நலவாழ்வு சேவைகளை ஆற்றியது. சகிப்புத்தன்மை மிகுந்த புதிய கலாச்சாரத்தை கிரேக்க-உரோமை நகரங்களில் உருவாக்கியது கிறிஸ்தவம்.

சமூக ஆய்வாளர் Rodney Stark அவர்கள் (The Rise of Christianity, Princeton University Press, 1996, page 161) முதல் சில நூற்றாண்டுகளில் கிறிஸ்தவத்தின் செயல்பாடுகள் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார். அன்று கிறிஸ்தவம் ஆற்றிய மனிதரை மையப்படுத்திய பணிகளையே இன்றும் ஆற்றி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

06/06/2018 13:09