2018-06-06 14:47:00

திருத்தந்தை பிரான்சிஸ் - செபிப்பவர் மீட்புப்பெறுகிறார்


ஜூன்,06,2018. ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறும்போது, ஒருவர் தான் வெட்கப்பட வேண்டிய நிலை பற்றி, வெட்கப்படத் தேவையில்லை என, கிறிஸ்தவப் பாரம்பரியச் செபங்களைக் கொண்ட ஒரு நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“செபிப்பவர் மீட்புப்பெறுகிறார் (Chi prega si salva)” என்ற தலைப்பிலுள்ள சிறிய நூலின் ஆறாவது பதிப்பிற்கு எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, ஆண்டவராகிய இயேசுவே வாரும், என்னிடம் வாரும், என்னத்தேடும், என்னைக் கண்டு கொள்ளும், உமது கரங்களில் என்னைத் தாங்கிக்கொள்ளும் என்ற புனித அம்புரோசியாரின் செபத்தை குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ மரபின் எளிய செபங்களை ஒன்றிணைக்கவும், ஒப்புரவு அருளடையாளத்தை நன்றாகப் பெறுவதற்கு உதவும் நோக்கத்திலும், 2001ம் ஆண்டில், அருள்பணி Giacomo Tantardini அவர்கள், செபிப்பவர் மீட்கப்படுகிறார் எனப்படும் சிறிய நூல் தயாரிப்பைத் தொடங்கினார். இந்நூல், உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, “30 நாள்கள் (30giorni)” என்ற இத்தாலிய இதழால் வெளியிடப்படுகின்றது. இந்நூல், உலகில் பல கத்தோலிக்க மறைப்பணித்தளங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.

2012ம் ஆண்டில் காலமான அருள்பணி Tantardini அவர்கள், அவரின் குழந்தைப்பருவ இதயத்தை நமக்கு நினைவுபடுத்துகிறார் எனவும், ஆண்டவரே, முதல் அடி எடுத்து வைப்பவர், அவரின்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது என்பது அவரின் செபமாக இருந்தது எனவும் திருத்தந்தை எழுதியுள்ளார்.

ஒப்புரவு அருளடையாளத்தை நன்றாகப் பெறுவதற்கு இந்நூல் பெரிய உதவியாக இருக்கின்றது என்று எழுதியுள்ள திருத்தந்தை, இந்த அருளடையாளத்தைப் பெறுபவர் புனிதர்களாக மாறுகின்றனர் என, அருள்பணி Tantardini அவர்கள் அடிக்கடி கூறுவார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.