2018-06-07 15:55:00

இமயமாகும் இளமை : சனநாயகத்திற்காக குரல் எழுப்பும் இளையோர்


நீ தனியாக நின்றாலும், எது சரியானதோ அதற்காக துணிந்து நில். இதுதான் விழித்தெழுந்துள்ள இளையோரில் அன்றும் இன்றும் ஓங்கி ஒலிக்கும் குரல். தமிழகமும் அண்மைக் காலமாக, இளம் இரத்தங்களின் ஏற்றமிகு எழுச்சியைக் கண்டு வருகிறது. சீனத் தலைநகர் பெய்ஜிங் தியானன்மென் (Tiananmen) வளாகத்தில், 1989ம் ஆண்டு ஜூன் 03, 04 ஆகிய நாள்களுக்கு இடைப்பட்ட இரவில் நூற்றுக்கணக்கில், ஏன் ஆயிரக்கணக்கில் இளையோரும் ஏனையோரும், காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானதும்,  சனநாயக வாழ்வு வேண்டும் மற்றும் ஊழல் ஒழிய வேண்டும் என அழைப்பு விடுத்ததாலே. 1980களில் சீனாவில் கம்யுனிச கட்சியின் தலைவர், பின் அதன் பொதுச்செயலராகப் பணியாற்றிய (1981-1987) Hu Yaobang அவர்கள், சீன அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். இது, அக்கட்சியில் பல மூத்த தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் கட்டாயத்தின்பேரில், கட்சியின் பொதுச் செயலர் பதவியிலிருந்து விலகிய Hu அவர்கள், 1989ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி காலமானார். சனநாயகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட Hu அவர்களின் அடக்கத்திற்கு முந்திய நாள், ஏறத்தாழ ஒரு இலட்சம் மாணவர்கள், பெய்ஜிங்கில், தியானன்மென் அதாவது, “விண்ணக அமைதியின் வாயில்” எனப் பொருள்படும் வளாகத்தில் கூடி, இவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தனர். பின்னர் தொடர்ந்து பல நாள்களாக அந்த இடத்தில் கூடி, சனநாயகத்துக்கு ஆதரவாகப் போராடி வந்தனர். இப்போராட்டத்தில் இளையோருடன் அறிவாளர்கள், உரிமை ஆர்வலர்கள் போன்ற பலரும் சேர்ந்துகொண்டனர். சீன கம்யுனிச அரசின் படைகள், 1989ம் ஆண்டு ஜூன் 03, 04 ஆகிய நாள்களுக்கு இடைப்பட்ட இரவில் பலரைச் சுட்டு வீழ்த்தின. இதில் மூவாயிரம் பேர் வரை இறந்தனர், பத்தாயிரம் பேர்வரை கைது செய்யப்பட்டனர் மற்றும், போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக பலர் தூக்கிலிடப்பட்டனர் என செய்திகள் கூறின. அதன்பின்னர், இந்த தியாகிகள், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 4ம் நாளன்று, நினைவுகூரப்படுகின்றனர். இந்த வன்முறையில் தங்கள் பிள்ளைகளை இழந்த அன்னையர் குழு, ஜூன் 04, இத்திங்களன்று சீன அதிபர் Xi Jinping அவர்களுக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில், தியானன்மென் படுகொலையை, மனித சமுதாயத்திற்கெதிரான குற்றம் எனக் குறிப்பிட்டு, இதில் பலியானவர்களுக்கு இழப்பீடு கேட்டுள்ளது. “வரம்பற்ற அதிகாரம், வரம்பின்றி ஊழல் செய்கிறது”. இவ்வாறு சொல்லிப் போராடும்  இளையோர், அன்றும் இன்றும் உள்ளனர். இளையோரின் நீதியின் குரல்கள் தொடர்ந்து ஒலிக்கட்டும்.   

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.