2018-06-07 16:10:00

சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி


ஜூன்,07,2018. இப்பூமிக்கோளத்தையும், அதன் மக்களையும் பாதுகாப்பது என்ற தலைப்பில், கிரீஸ் நாட்டின் ஏத்தென்ஸ் நகரில், ஜூன் 05, இச்செவ்வாய் முதல், ஜூன் 08, இவ்வெள்ளி வரை, நடைபெற்றுவரும் சுற்றுச்சூழல் குறித்த மாநாட்டிற்கு செய்தி அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாநாட்டில் திருப்பீடத்தின் சார்பில், நைஜீரியாவின் அபுஜா கர்தினால் John Olorunfermi Onaiyekan, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் ஆகிய இருவரும் கலந்துகொள்கின்றனர்.

இம்மாநாட்டை நடத்தும், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலமேயோ அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியை, கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வாசித்தார்.

இத்தனை அழகான மத்தியதரை கடல், மனிதரின் புதைகுழியாக மாறியுள்ளது என்றும், இம்மனிதரில் பலர், தங்கள் நாடுகளில் மனிதமற்ற நிலைகளிலிருந்து தப்பிப்பதற்காக வெளியேறியவர்கள் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, கிரேக்க நாடு பணவீக்கத்தை எதிர்கொண்டாலும், முழுவதும் மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களால் புலம்பெயரும் மக்களை வரவேற்கின்றது என்று கூறியுள்ளார்.

படைப்பைப் பாதுகாக்க வேண்டியது அனைத்து நன்மனம் கொண்ட மனிதரின் கடமை எனவும், சுற்றுச்சூழல் பிரச்சனையின் ஆன்மீகம் சார்ந்த காரணங்களை அறிந்து, அப்பிரச்சனையைக் களைய கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.