2018-06-07 16:31:00

ஜூன் 08, மதியம் ஒரு மணிக்கு அமைதிக்காக செபம்


ஜூன்,07,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து, ஜூன் 8, இவ்வெள்ளிக்கிழமையன்று, உலக அமைதிக்காக ஒரு நிமிடம் செபிக்குமாறு உலகளாவிய கத்தோலிக்க கழகம், அனைத்து மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு, எந்த நாட்டில், எந்த இடத்தில் இருக்க நேர்ந்தாலும், அச்சமயத்தில் என்ன செய்துகொண்டிருந்தாலும், அதை நிறுத்தி, தலையை தாழ்த்தி ஒரு நிமிடம் உலக அமைதிக்காகச் செபிக்குமாறு எல்லாருக்கும் அக்கத்தோலிக்க கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முயற்சியால், 2014ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி, வத்திக்கானில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அரசுத்தலைவர்கள் சந்தித்ததன் நான்காம் ஆண்டு நிறைவு நாளில், உலகினர் அனைவரும் உலக அமைதிக்காகச் செபிக்கும் நடவடிக்கையை ஏற்படுத்தியுள்ளது, இக்கத்தோலிக்க கழகம்.  

உலகில் இடம்பெறும் இரத்தம் சிந்தும் மோதல்கள் முடிவுக்கு வருமாறு அந்நேரத்தில் செபிக்குமாறு, உலகளாவிய கத்தோலிக்க கழகம், இத்தாலிய கத்தோலிக்க கழகம், அர்ஜென்டீனா கத்தோலிக்க கழகம், அர்ஜென்டீனா ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை போன்றவை இணைந்து விண்ணப்பித்துள்ளன.

உரோம் Conciliazione சாலையில், எண் ஒன்றிலுள்ள இத்தாலிய கத்தோலிக்க கழகத்தின் தலைமை அலுவலகத்தின் முன்னரும், புவனோஸ் அய்ரெஸ் நகரில், அர்ஜென்டீனா ஆயர் பேரவை தலைமை அலுவலகத்தின் முன்னரும் இந்நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. அன்று மதியம் ஒரு மணி முதல், 3 மணி வரை, அமைதி, மனித உரிமைகளை மதித்தல் ஆகிய தலைப்புக்களில் கலந்துரையாடல்களும் நடைபெறும்.

கொலம்பியா, மியான்மார், உக்ரைன், புருண்டி ஆகிய நாடுகளுக்காக சிறப்பாகச் செபிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.