2018-06-07 16:40:00

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மனித உரிமைகள்


ஜூன்,07,2018. பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்றுவரும் போதைப்பொருளுக்கு எதிரான  அரசின் நடவடிக்கையில், காவல்துறை அதிகாரிகள், மனித உரிமைகளையும், சட்ட விதிமுறைகளையும் மதிக்கின்றனர் என, அந்நாட்டு கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களிடம் உறுதியளித்துள்ளார், அந்நாட்டு காவல்துறை தலைமை அதிகாரி.

மனிலா கர்தினால் தாக்லே அவர்களின் 25வது குருத்துவ வெள்ளி விழாவையொட்டி, பிலிப்பீன்ஸ் தேசிய காவல்துறை தலைவர் Oscar D. Albayalde அவர்கள் கர்தினாலுக்கு, இப்புதனன்று வாழ்த்துக்கூற வந்தவேளையில் நடைபெற்ற சந்திப்பில், இவ்வாறு உறுதியளிக்கப்பட்டது. தேசிய காவல்துறை தலைவருடன், மேலும் சில காவல்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.

நாங்கள் எல்லாரும் இறைவனில் நம்பிக்கை கொண்டுள்ளோம் மற்றும் மனித உரிமைகளை மதிக்கின்றோம் என, கர்தினால் தாக்லே அவர்களிடம் தெரிவித்தார், காவல்துறை தலைவர் Albayalde.

இச்சந்திப்பு குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, பிலிப்பீன்ஸ் தேசிய சமூகநலப்பணி செயலகத்தின் தலைவரும், காரித்தாஸ் அமைப்பின் செயலருமான அருள்பணி Edwin A. Gariguez அவர்கள், நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன என்று கூறினார்.

2016ம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றபின், அரசுத்தலைவர் துத்தர்த்தே அவர்கள், சட்டத்திற்குப்புறம்பேயான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இதில் சந்தேகத்தின்பேரில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன. கத்தோலிக்க திருஅவை உட்பட பல மனித உரிமை ஆர்வலர்கள், இக்கொலைகளுக்கு எதிரான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆதாரம் : CNA/EWTN /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.