2018-06-09 11:33:00

இமயமாகும் இளமை - புனித நதிகள் பாவத்தைக் கழுவாது


கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார் ஒரு குரு. அவருடைய சீடர்களாக, மூன்று இளையோர், அந்த ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தனர். அம்மூன்று சீடர்களும் ஒருநாள் அவரிடம் சென்று, "குருவே, கடந்த ஓராண்டளவாய், நாங்கள் ஒவ்வொரு நாளும் இந்த நதியின் புனித நீரில் மூழ்கி எழுந்துள்ளோம். தற்போது, இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் மூழ்கி எழுவதற்கு விரும்புகிறோம்" என்று சொன்னார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு முடிவெடுத்தனர் என்று கேட்ட குருவிடம், "கங்கை எங்கள் பாவங்களைக் கழுவினாலும், இன்னும் மற்ற நதிகளில் மூழ்கி எழுந்தால், எங்கள் பாவங்கள் முற்றிலும் கழுவப்படும் என்று நினைக்கிறோம்" என்று பதில் சொன்னார்கள்.

அவர்களது புனித யாத்திரைக்கு அனுமதி வழங்கிய குரு, அவர்கள் புறப்படும் நேரத்தில், அவர்களிடம் ஒரு பாகற்காயைக் கொடுத்தார். ஏன் என்று புரியாமல், குருவைப் பார்த்த சீடர்களிடம், "நீங்கள் ஒவ்வொரு நதியிலும் மூழ்கி எழும்போது, இந்தப் பாகற்காயையும் நீரில் அமிழ்த்தி, கொண்டு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.

புனித யாத்திரை முடிந்து திரும்பிவந்த சீடர்கள், பாகற்காயை குருவிடம் கொடுத்தனர். அவர் அதை வாங்கி, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, சீடர்களிடம் கொடுத்து, "இது எல்லா புனித நதிகளிலும் மூழ்கி எழுந்த காய். எனவே, சாப்பிடுங்கள்" என்று சொன்னார்.  அதைச் சாப்பிட்ட சீடர்கள் அனைவரும், "என்ன குருவே! இந்தப் பாகற்காய் இவ்வளவு கசக்கிறதே!" என்று முகம் சுழித்தனர்.

குரு அவர்களிடம், "எத்தனை புனித நதிகளில் அமிழ்த்தி எடுக்கப்பட்டாலும், பாகற்காய் தொடர்ந்து கசப்பாகத்தான் இருக்கும். நீங்களும், எத்தனை புனித நதிகளில் மூழ்கி எழுந்தாலும், உங்கள் உள்ளங்களில் மாற்றங்கள் இல்லையெனில், பாவங்கள் கரையாது" என்று கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.