2018-06-09 11:23:00

ஏழைகள், சுற்றுச்சூழல் பராமரிப்பு உலகின் இருபெரும் தேவைகள்


ஜூன்,09,2018. படைத்தவராம் இறைவனிடமிருந்து நாம் பெற்றுள்ள தோட்டமாகிய இப்பூமியை, வருங்காலத் தலைமுறைகளுக்கு, பொட்டல் காடாக வழங்காதிருப்பதற்குத் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டார்.

‘மின்சக்தி மற்றும் நம் பொதுவான இல்லமாகிய பூமியைப் பராமரித்தல்’ எனும் தலைப்பில், வத்திக்கானில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட, எரிசக்தி எண்ணெய், இயற்கை வாயு, மற்றும் மின்சாரத்தோடு தொடர்புடைய பெரிய தொழில் நிறுவனங்களின் ஏறக்குறைய ஐம்பது பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

இக்காலத்தில் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் இடம்பெறும் அதிவேக முன்னேற்றம், சமூகத்தொடர்புகளைத் துரிதப்படுத்தியுள்ளது என்றும், வேகமாக வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பத்தில், மக்களுக்கும், செயல்பாடுகளுக்கும், மின்சாரம் மிக அதிக அளவில் தேவைப்படுகின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, உலகில் நூறு கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு, இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது என்று கூறினார்.

மின்சக்தி விவகாரம், இந்த உலகின் முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளது என்றும், 2015ம் ஆண்டு டிசம்பரில், 196 நாடுகள் கலந்துகொண்டு உருவாக்கிய பாரிஸ் ஒப்பந்தப்படி, உலக வெப்பநிலையை 2 சென்டிகிரேடுக்குக் குறைவாக, இயலுமானால், 1.5 சென்டிகிரேடுக்குக் குறைவாகக் கொண்டுவருவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால், அதற்குப்பின் ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளில் புவி மண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் வெளியேற்றம் அதிகமாக உள்ளது எனச் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை.

பண்பாட்டிற்கு மின்சக்தி தேவைப்படுகின்றது, அதேநேரம், மின்சாரத்தைப் பயன்படுத்துவது, பண்பாட்டை அழித்துவிடக் கூடாது என்றுரைத்த திருத்தந்தை, எரிசக்தி எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருவதை பாராட்டினார்.

எனினும், இந்த முயற்சிகள், வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய, நீண்டகாலத் திட்டங்களாக இருக்க வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் மற்றும், மின்சக்தி பிரச்சனைகள் உலக அளவில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன, இதில் வறிய நாடுகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றன எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழைகளையும் சுற்றுச்சூழலையும் பராமரிக்க வேண்டியது, இன்றைய உலகின் இருபெரும் தேவைகளாக உள்ளன என்றுரைத்த திருத்தந்தை, உலக அளவில், மின்சக்தி பரிமாற்றத்திற்குப் பொறுப்பானவர்கள், இந்த உலகின் அனைத்து மக்களையும், வருங்காலத் தலைமுறைகளையும், அனைத்து உயிரினங்களையும், சுற்றுச்சூழல் அமைப்பையும் கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.