2018-06-09 14:59:00

புனிதர், முத்திப்பேறுபெற்ற நிலைகளுக்கு...


ஜூன்,09,2018. புனிதர் மற்றும் முத்திப்பேறுபெற்ற நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, ஓர் அருளாளர், இரு வணக்கத்துக்குரியவர்கள் ஆகியோரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள், அர்ஜென்டீனா நாட்டு நான்கு மறைசாட்சிகளின் வீரத்துவ கிறிஸ்தவ சாட்சிய வாழ்வு ஆகிய விவரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட புனிதர் பேராயத் தலைவரான கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், இவ்வெள்ளிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து இவ்விவரங்களை சமர்ப்பித்தார்.

இத்தாலியின் Pescosansonescoவில், 1817ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பிறந்த பெதுநிலை விசுவாசி, முத்திப்பேறுபெற்ற Nunzio Sulprizio அவர்கள், 1836ம் ஆண்டு மே 5ம் தேதி நேப்பிள்ஸ் நகரில் காலமானார். இவரின் பரிந்துரையால் ஒரு புதுமை நடைபெற்றுள்ளது.

மெக்சிகோ நாட்டின் San Luis Potosíல் 1862ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிறந்த, கைம்பெண்ணும், ஒரு குடும்பத்தின் தாயுமாகிய, வணக்கத்துக்குரிய Maria della Concezione Cabrera Arias அவர்கள், மெக்சிகோ நகரில், 1937ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி காலமானார். இவரின் பரிந்துரையால் ஒரு புதுமை நடைபெற்றுள்ளது

இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில், 1916ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி பிறந்த, வணக்கத்துக்குரிய Maria Guadalupe Ortiz de Landázuri y Fernández de Heredia அவர்கள், இஸ்பெயினின் Pamplona நகரில், 1975ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி காலமானார். Opus Dei அமைப்பைச் சேர்ந்த பொதுநிலை விசுவாசியாகிய இவரின் பரிந்துரையால் ஒரு புதுமை நடைபெற்றுள்ளது.

அர்ஜென்டீனா நாட்டின் La Rioja ஆயர் Enrico Angelo Angelelli Carletti, அம்மறைமாவட்ட அருள்பணியாளர் Gabriel Joseph Roger Longueville, பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் Carlos de Dios Murias, ஒரு குடும்பத்தின் தந்தையாகிய Venceslao Pedernera ஆகிய நால்வரும், 1976ம் ஆண்டில், கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொல்லப்பட்டவர்கள்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.