2018-06-11 16:33:00

அமெரிக்க-வடகொரிய சந்திப்பிற்காகச் செபிக்க அழைப்பு


ஜூன்,11,2018. ஜூலை 12, இச்செவ்வாயன்று சிங்கப்பூரில், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நடைபெறவிருக்கும் சந்திப்பு பற்றி, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சந்திப்பு, கொரியத் தீபகற்பத்திலும், உலகிலும் வருங்காலத்தில் அமைதி நிலவ உதவுமாறு அன்னை மரியிடம் செபிப்போம் எனக் கூறினார்.

அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் Kim Jong Un ஆகிய இரு தலைவர்களுக்கிடையே இடம்பெறும் கலந்துரையாடல் வெற்றி பெற கொரிய அன்னையிடம் செபிப்போம் எனக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.  

பின்னர், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுடன் சேர்ந்து, அன்னை மரியை நோக்கி அருள் நிறைந்த மரியே வாழ்க என்ற செபத்தையும், இக்கருத்துக்காகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டுமென விசுவாசிகளுடன் சேர்ந்து செபிப்பதும், அமைதிக்காக அழைப்பு விடுப்பதும் இது முதன் முறையல்ல. கடந்த ஏப்ரல் 29ம் தேதி இரு கொரியத் தலைவர்கள் நடத்திய சந்திப்புக்காக அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் செபித்திருக்கின்றார் திருத்தந்தை.

அச்சந்திப்பு வெற்றிபெற, தன் செபங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் கடிதம் ஒன்றையும், கொரிய திருஅவைக்கு அனுப்பினார் திருத்தந்தை.

வெற்றியைவிட அமைதி மிகவும் விலைமதிப்பற்றது என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.