2018-06-11 14:33:00

வாரம் ஓர் அலசல் – சிறார் தொழில் எதிர்ப்பு தினம்


ஜூன்,11,2018. 2018ம் ஆண்டு, ஜூன் 12, இச்செவ்வாய், உலக வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள். உலகமே ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நாள். இருபெரும் எதிர் துருவங்கள் நேருக்கு நேர் சந்திக்கும் வரலாற்று நாள். அறுபது ஆண்டுகளுக்கும் மேலான பகை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு இடம்பெறும் நாள். ஆம். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு ட்ரம்ப் அவர்களும், வட கொரிய கம்யுனிச அதிபர் கிம் ஜோங்-உன் அவர்களும் கலந்துரையாடல் நடத்துவதற்காக, ஜூன் 10, இஞ்ஞாயிறன்று சிங்கப்பூர் சென்றுள்ளனர். இத்தலைவர்களுடன் இவ்விரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களும் சென்றுள்ளனர். சிங்கப்பூரின் Sentosa தீவில் Capella பயணியர் விடுதியில், கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில், இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில், கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவச் செய்தல், அணு ஆயுத ஒழிப்பு ஆகியவை முக்கிய அம்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 1950க்கும், 1953ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட  காலகட்டத்தில் நிகழ்ந்த கொரிய போருக்குப் பின், எதிரிகளாக இருந்து வரும் வடகொரியா - அமெரிக்கா அதிபர்கள் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ  பேச்சு நடத்தியது இல்லை. பல கட்ட நடவடிக்கைகளுக்குப் பின் வடகொரிய தலைவருடன், அமெரிக்க அரசுத்தலைவர் டிரம்ப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தப் பேச்சுவாத்தையின் மூலம் வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையே, இச்சந்திப்புக்கு, ஏறக்குறைய நூறு கோடி ரூபாய் செலவாகும் என்றும், இந்தச் செலவைச் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும், சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசுத்தலைவர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஆகிய இரு தலைவர்களுக்கிடையே இடம்பெறும் கலந்துரையாடல் வெற்றி பெறவும், கொரியத் தீபகற்பத்திலும், உலகுக்கும் வருங்காலத்தில் அமைதியைக் கொண்டுவரவும் வேண்டுமென, கொரிய அன்னை மரியிடம் செபிப்போம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் கூறினார். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த திருப்பயணிகளுடன் சேர்ந்து, அன்னை மரியை நோக்கி அருள் நிறைந்த மரியே வாழ்க என்ற செபத்தையும், இக்கருத்துக்காகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டுமென விசுவாசிகளுடன் சேர்ந்து செபிப்பதும், அமைதிக்காக அழைப்பு விடுப்பதும் இது முதன் முறையல்ல. கடந்த ஏப்ரல் 29ம் தேதி இரு கொரியத் தலைவர்கள் நடத்திய சந்திப்புக்காக அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் செபித்திருக்கின்றார் திருத்தந்தை. அச்சந்திப்பு வெற்றிபெற, தன் செபங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் கடிதம் ஒன்றையும், கொரிய திருஅவைக்கு அனுப்பினார். வெற்றியைவிட அமைதி மிகவும் விலைமதிப்பற்றது என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையுடன் நாமும் இணைந்து,  இத்தலைவர்களின் சந்திப்பு உலக அமைதிக்கு வித்திட வேண்டுமெனச் செபிப்போம்.

உலகில் அமைதி, நாடுகளில் அமைதி, மக்கள் மனங்களில் அமைதி... இவைதான் நாம் எல்லாருமே விரும்புவது. ஆனால் அமைதி ஏன் இல்லை என்பதற்குரிய காரணங்களும் நமக்குத் தெரியாமல் இல்லை. பாலியல் வன்கொடுமைகள், மனித வர்த்தகம், சிறார் தொழில், குடும்பக் கடனை அடைப்பதற்காக, பிள்ளைகள் கொத்தடிமைகளாக வேலை செய்தல், தெருக்களில் அல்லது மறைவான இடங்களில் பொருள்களை விற்பது, போதைப்பொருள் வர்த்தகம்... இவ்வாறு பல வழிகளில் இன்று உலகில் ஏராளமான மக்கள் உடல் அளவிலும், மனத்தளவிலும் இன்னல்களையும், சித்ரவதைகளையும் எதிர்கொள்கின்றனர். உலகில் சிறார் தொழில் என்பது, 18 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாயத்தின்பேரில் செய்யும் வேலையாகும். இவர்கள் கல்வியில் முழுவதும் கவனம் செலுத்துவதைவிடுத்து, ஐந்து வயது முதல் மிகக்குறைந்த அல்லது ஊதியமில்லாமலே ஒரு நாளைக்கு இருபது மணிநேரம் வரைகூட வேலை செய்கின்றனர். இந்நிலை வளர்ந்த மற்றும் துருக்கி, உக்ரைன் போன்ற தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளிலும் உள்ளது என ஒரு புள்ளி விவரம் கவலையுடன் கூறியுள்ளது. சிறார் தொழிலாளரில் ஏறத்தாழ எழுபது விழுக்காட்டினர் மிகவும் ஆபத்தான நிலைகளில் வேலை செய்கின்றனர். உலகில் 200 ஆண்டுகளுக்குமேல் இயங்கிவரும் பருத்தி ஆலைகளும் இதில் உள்ளடங்கும். உலகில், 15 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 13 கோடியே 20 இலட்சம் சிறார் நிலங்களில் வேலை செய்கின்றனர். ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதி, தெற்கு ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சிறார் தொழிலாளர் அதிகம். 

உலகில் சிறார் தொழில்முறையை ஒழிப்பதற்காக ILO எனப்ப்டும் ஐ.நா.வின் உலக தொழில் நிறுவனம், 2002ம் ஆண்டில், உலக சிறார் தொழில் எதிர்ப்பு நாளை உருவாக்கியது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12ம் நாளன்று, அரசுகள், தொழிலதிபர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் சமுதாயம் ஆகியோரில், இலட்சக்கணக்கான சிறார் தொழிலாளர் எதிர்கொள்ளும் துன்பங்களை எடுத்துச்சொல்லி, அத்தொழில்முறை அகற்றப்பட அழைப்பு விடுக்கின்றது அந்நிறுவனம். 2015ம் ஆண்டில் உலகத் தலைவர்கள் ஏற்றுக்கொண்ட, நிலைத்து நீடித்து இருக்கக்கூடிய வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்ட சிறார் தொழில்முறையும் ஒழிக்கப்பட வேண்டும். சிறார் படைகளில் சேர்க்கப்படுவது உட்பட, சிறார் தொழில்முறையின் அனைத்து வடிவங்களும், 2025ம் ஆணடுக்குள் நீக்கப்பட வேண்டும் என உலக தொழில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று உலகில் ஏறக்குறைய 21 கோடியே 80 இலட்சம் சிறார் முழுநேரத் தொழிலாளர்கள். இவர்களில் பாதிப்பேர், ஆபத்தான சூழல்களில் வேலை செய்கின்றனர். இச்சிறார் தொழிலாளர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை, இவர்களுக்கு விளையாட நேரமில்லை, சத்தான உணவு கிடைப்பதில்லை. இவர்களுக்கு, சிறார் பருவம் மறுக்கப்படுகின்றது.

இந்தியாவில் ஆந்திரா, பீஹார், குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, ம.பி., ஒடிசா, ராஜஸ்தான், உ.பி., மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில், கிரானைட் குவாரிகள் இயங்கி வருகின்றன. 200க்கும் மேற்பட்ட நிறங்களை உடைய கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த குவாரிகளில், சிறார் தொழிலாளர்கள் அதிகளவில், பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதை தடுத்து நிறுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக, 2007ம் ஆண்டில், 'தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்' என்ற சட்டரீதியான அமைப்பை, மத்திய அரசு உருவாக்கியது. சிறார் உரிமை தொடர்பான சட்டங்களும், விதிமுறைகளும் நாட்டில் கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்டறிவதே இந்த அமைப்பின் வேலை. இந்நிலையில், கிரானைட் குவாரிகளில், சிறார் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுவது குறித்தும், அவர்கள் மீதான அத்துமீறல்களைத் தடுப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்க, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்தது. இதற்காக, உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு, 2017, செப்டம்பர் மற்றும், 2018, பிப்ரவரியில் இரண்டு கட்டங்களாக ஆய்வு நடத்தியது. இதன் இறுதியில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிரானைட் குவாரிகளில், குழந்தை தொழிலாளர் முறை, முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

சிறார் தொழில் எதிர்ப்பு நாள் பற்றிப் பேசும் இந்நிகழ்ச்சியில், சிறாரின் சிறப்பைச் சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறோம். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ஸ்ரீநகரில் புகழ் பெற்ற தால் ஏரி உள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் அதிகம் கவரும் அந்த ஏரி நாளுக்கு நாள் அசுத்தம் அடைந்து, குப்பைகள் சேர்ந்து வருகிறது. இந்த ஏரியைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் காஷ்மீர் மாநில அரசும் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஏரிகள் மற்றும் நீர்வழி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அதேநேரம், அம்மாநிலத்தில், எல்.கே.ஜி. படிக்கும் சிறுமி ஜன்னத், அந்த ஏரியை சுத்தம் செய்யும் பணியில், தனது தந்தையுடன் சேர்ந்து ஈடுபட்டு எல்லாரின் பாராட்டையும் பெற்றுள்ளார். இது குறித்து சிறுமி ஜன்னத் நிருபர்களிடம் கூறுகையில் "உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பல்வேறு விதமான குப்பைகளையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும், பிளாஸ்டிக் பேப்பர்களையும் ஏரியில் வீசுகிறார்கள். இதனால், ஏரி அசுத்தம் அடைந்து அதன் அழகை இழந்து வருகிறது. ஆதலால், அனைவரும் குப்பைகளை, குப்பைத் தொட்டியில் போட வேண்டும், ஏரியின் அழகை பாதுகாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். மேலும், கடந்த சனவரியில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த சிறுமி நந்தினி, குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அவருக்கு தமிழக அரசு சார்பில் ஒரு இலட்சம் ரூபாய் பரிசும், முதல்வர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

வருங்காலத் தலைமுறைகளை வாழ வைப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.