சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு உப்பாக, ஒளியாக இருப்பது

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

12/06/2018 15:27

ஜூன்,12,2018. உணவுக்கு சுவையூட்ட உப்பு பயன்படுகிறது, அதுபோல், ஒளியும் பிறருக்கே ஒளியூட்டுகிறது, இந்த உப்பும், ஒளியும் போன்று, கிறிஸ்தவர்கள் தினசரி வாழ்வில் சாட்சிகளாகச் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க்கிழமை காலை, திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களுடைய தனிப்பட்ட பெருமைகளைக் குறித்து எடுத்துரைக்காமல், ஒவ்வொருவரும், ஏனையோருக்கு உப்பாகவும் ஒளியாகவும் விளங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மிக உயரிய சாட்சியம் என்பது, கிறிஸ்துவைப்போல் தன்  உயிரையே வழங்குவது, அதேவேளையில் தினசரி சாட்சியம் என்று ஒன்று உள்ளது, அது காலையில் எழுந்ததிலிருந்து இரவில் படுக்கைக்குச் செல்லும்வரை, பிறருக்கு உப்பாகவும் ஒளியாகவும் செயல்படுவதாகும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். தங்களுக்கென்று எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காமல், மற்றவர்களுக்குப் பயன்படக்கூடிய உப்பும் ஒளியும், கிறிஸ்தவர்கள் செயல்படவேண்டிய சாட்சிய வாழ்வுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உணவு உண்ணும்போது, உணவு நன்றாக இருக்கிறது என்று சொல்கின்றோமேயல்லாது, உப்பு சுவையாக இருக்கிறது என்று உரைப்பதில்லை, அதுபோல், இருளில் நமக்கு உதவும் ஒளியில் நாம் வாழ்ந்தாலும், ஒளியை நாம் பாராட்டுவதில்லை என உரைத்த திருத்தந்தை, சாட்சியாக வாழும் கிறிஸ்தவர்களும், தங்களை முன்னிறுத்தாமல், மற்றவர்களுக்கான சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.

நாம் மற்றவர்களுக்கு பயன்தரும் வகையில் செயல்படுகிறோமா என ஒவ்வொரு நாளும் நம்மைப் பார்த்துக் கேட்பதே, புனிதத்துவத்தை நோக்கிய பாதையாகும் என, மேலும் தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

12/06/2018 15:27