2018-06-12 13:19:00

இமயமாகும் இளமை - ‘பிளாஸ்டிக்’ மலர்களைப்போல்…


நசுருதீன் தன் வீட்டுக்கு முன்புறம், தொட்டிகளில் பூத்திருந்த மலர்களுக்கு தினமும் நீர் ஊற்றிவந்தார். ஆனால், அவர் நீர் ஊற்றும் பாத்திரத்தில் ஒரு சொட்டு நீரும் இருந்ததில்லை. இதை ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருந்த அடுத்த வீட்டுக்காரர், அவரிடம் ஒருநாள் சென்று, "நீங்கள் தினமும் இந்தப் பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுவதுபோல் தெரிகிறது. ஆனால் ஒருநாளும் நீங்கள் வைத்திருக்கும் பாத்திரத்திலிருந்து தண்ணீர் வந்ததை நான் பார்த்ததில்லை. இத்தனை நாள்கள் தண்ணீரின்றி இந்தப் பூக்களும் மலர்ந்தே உள்ளன. இது எப்படி சாத்தியம்?" என்று கேட்டார். அதற்கு நசுருதீன், அவரிடம், இரகசியமாக, "இவை அனைத்தும் ‘பிளாஸ்டிக்’ மலர்கள். இவற்றிற்கு ஏன் தண்ணீர் ஊற்றவேண்டும்?" என்று சொன்னார்.

இதைக் கேட்டு மேலும் குழம்பிய அடுத்த வீட்டுக்காரர், "பின் ஏன் தண்ணீர் ஊற்றுவதுபோல் நடிக்கிறீர்கள்?" என்று கேட்டார். நசுருதீன் ஒரு புன்முறுவலோடு, "அப்படி தண்ணீர் ஊற்றுவதுபோல் நான் நடித்தால்தான், அவை உண்மையான மலர்ச் செடிகள் என்று மற்றவர்கள் நினைப்பர்" என்று சொல்லியபடி, அச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதுபோல் நடித்தார்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக போலிவேடம் போடும் இளையோர், ‘பிளாஸ்டிக்’ மலர்களாகவே தங்கள் இளமையைக் கழிக்கவேண்டியிருக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.