2018-06-13 15:46:00

இமயமாகும் இளமை.........: நீங்களும் 'கதைசொல்லி' ஆகலாம்!


ஈரோட்டில் வாழ்கின்ற வனிதாமணி என்பவர், தன் வீட்டில் 'பட்டாம்பூச்சி' என்ற குழந்தைகள் நூலகத்தை நடத்தி வருகிறார். அத்துடன், 'கதைக்களம்' என்ற பெயரில் கதைசொல்பவராகவும் இயங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிறுகளில் இவரது வீட்டிலேயே 'கதைக்களம்' நிகழ்வு நடைபெறும். கட்டணம் ஏதுமில்லா இந்தக் கதைக்கள முகாமில் ஒவ்வொரு வாரமும் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

"இளங்கலை வேதியியல், எம்.பி.ஏ. நிதி மேலாண்மை படிப்பை முடித்த வனிதாமணி அவர்கள், குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற உந்துதலில், எம்.ஏ. யோகா படித்து, அதன்பின், தன் வீட்டுக்கு அருகில் அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு தன்னார்வமாக யோகா கற்றுக்கொடுத்து வந்தார். தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தபின் அவரின் அன்றாட வாழ்க்கையையே மாற்றிக்கொள்ள நேர்ந்தது. தன் குழந்தைக்கு தினமும் கதை சொல்லிக்கொண்டே இருப்பாராம் அவர். "இருபது ஆண்டுகளாகத் தொடரும் புத்தக வாசிப்பு, குழந்தைகளோடு இருக்கும் விருப்பம், கதை சொல்லும் திறன்... இவை அனைத்தையும் ஒன்றிணைத்து நமக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்ற சிந்தித்தபோது உருவான இலக்குதான் 'கதைசொல்லி' ஆவதற்கான முயற்சி" என்கிறார் அவர். 'பட்டாம்பூச்சி' நூலகத்தில் 'கதைக்களம்' காணும் 3-ல் இருந்து 12 வயது வரையிலான குழந்தைகளை முதலில் விளையாட வைக்கிறார் வனிதாமணி. இதில் பல்லாங்குழி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெறும். அங்கு ஆடலும் பாடலும் அரங்கேறும். குழந்தைகளிடம் உற்சாகம் கூடியதும் கதை சொல்லத் தொடங்குவார் வனிதாமணி. விதவிதமான முகபாவனைகளுடனும், ஏற்ற இறக்கக் குரலுடனும் இவர் கதைசொல்லும் விதத்தை குழந்தைகள் வெகுவாக இரசிக்கின்றனர். கதை முடிந்த பின்பு, ஒவ்வொரு குழந்தையும் புத்தகங்களை எடுத்து வைத்து, சில வரிகளை வாய்விட்டு வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். தாங்கள் வாசித்தவை பற்றி குழுவாக விவாதிக்கவும் செய்கிறார்கள். "குழந்தைகளுக்கு தமிழில் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதுதான் முதன்மை நோக்கம். இதற்கு 'கதைக்களம்' ஓர் ஆயுதம். இந்த முயற்சியால் குழந்தைகள் தன்னிச்சையாக சிந்திக்கிறார்கள், படைப்பாற்றலுடன் இயங்குகிறார்கள்" என்கிறார் வனிதாமணி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.