2018-06-13 16:53:00

இயற்கைப் பேரிடரைக் குறைப்பது பற்றி காரித்தாஸ்


ஜூன்,13,2018. இயற்கைப் பேரிடர்கள் மற்றும் கடும் காலநிலை மாற்ற நிலைகளால், இந்தியா தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும்வேளை, பேரிடர் சமயங்களில் எப்படி தங்களைக் காத்துக்கொள்வது என்பது பற்றி, இந்திய காரித்தாஸ் நிறுவனம் கிராம மக்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து, புழுதிப் புயல்களும், கனமழையும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அதிகம் பாதித்துள்ளன. இவற்றில், 278 பேர் இறந்துள்ளனர். 2005ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை இடம்பெற்ற இயற்கைப் பேரிடர்களில் 2,200 பேர் இறந்துள்ளனர். ஆயிரம் கோடி டாலர் வரையில் பொருளாதார இழப்பும் அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளன என செய்திகள் கூறுகின்றன.

2015ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இறைவா உமக்கே புகழ் என்ற திருத்தூது மடலைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டங்களில் இந்திய திருஅவைக் குழுக்கள் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றன.

அசாம், மிசோராம், மணிப்பூர், பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர், குஜராத் போன்ற மாநிலங்களில், பேரிடர் ஆபத்துக்களைக் குறைப்பது பற்றிய நடவடிக்கைகளில், 2017ம் ஆண்டிலிருந்து இறங்கியுள்ளது, இந்திய காரித்தாஸ் அமைப்பு.   

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.