2018-06-13 16:35:00

குடும்பம், வயதானவர்களின் உரிமைகளுக்கு திருப்பீடம் ஆதரவு


ஜூன்,13,2018. வயது முதிர்ந்தவர்கள் உட்பட, அனைவரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு குழுவாக, குடும்பம் நோக்கப்பட வேண்டும், சமுதாயமும், அரசும், குடும்பத்தின் தனித்துவத்திற்கு ஆதரவளித்து, பாதுகாக்க வேண்டும் என திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது.

குடும்பம் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து,  ஜெனீவாவில், இத்திங்களன்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், இவ்வாறு திருப்பீடத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

குடும்பத்தின் தனித்துவமிக்க மற்றும் இன்றியமையாத பங்கு பற்றி உரையாற்றிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், குடும்பம், அன்புக் கலாச்சாரத்தின் இதயம் என்றும், மனிதத்தன்மையுடன் வாழ்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுப்பது உட்பட பல வழிகளில், குடும்பம், முதல் கல்விக்கூடமாக உள்ளது என்றும் கூறினார்.

தலைமுறைகள் மத்தியில் ஒருமைப்பாட்டுணர்வு வலுப்படுத்தப்படும் இடமாகவும், வயதானவர்கள் மற்றும் இளையோர்க்கிடையே பொறுப்புள்ள உறவுகளை ஊக்கப்படுத்தும் இடமாகவும் குடும்பம் அமைந்துள்ளது எனக் கூறிய பேராயர், குடும்பம், ஒரு சமூகத்தின் அடிப்படை உயிரணு என்றும் உரையாற்றினார்.

தேவைகளின் அடிப்படையில் மட்டுமே அமைக்கப்படும் குடும்பம், தன்னலம் நிறைந்த சமுதாயமாக மாறும் எனவும், அந்த சமுதாயத்தில், வாழ்வு, குறிப்பாக நலிந்தவர்களின்  வாழ்வு வரவேற்கப்படாமலும், பாதுகாக்கப்படாமலும் இருக்கும் எனவும், திருப்பீட பிரதிநிதி, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் உரையாற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.