2018-06-13 16:19:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3


ஜூன்,13,2018. தொடக்ககாலத் திருஅவை, அந்தந்த நாடுகளின் சமூக, பொருளாதார மற்றும் அரசியலிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்துள்ளது என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். நான்காம் நூற்றாண்டின் மத்திய பாகத்தில் வாழ்ந்த, ஆயரும், இறையியலாளருமான செசரியாவின் புனித பேசில் அவர்கள், தனக்குச் சேர வேண்டிய குடும்பச் சொத்திலிருந்து கிடைத்த பணத்தை வைத்து, ஏழைகளுக்கும், தொழுநோயாளர்களுக்குமென மருத்துவமனை ஒன்றை ஏற்கனவே கட்டியிருந்தார். தான் மேய்ப்புப்பணியாற்றும் கிறிஸ்தவர்களும், பிறரன்பு பணிகளில் வாழ வேண்டுமென விரும்பினார் புனித பேசில். விசுவாசம் செயலில் காட்டப்பட வேண்டுமென்பதே அப்புனிதரின் நோக்கம். அதனால் ஒருசமயம், தனது திருஅவையில் இருந்த செல்வர்களிடம், கடினமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

"ஒருவர் சுவர்களுக்கு ஆடை உடுத்தி, மனிதருக்கு ஆடை உடுத்தாமல் இருந்தால் அவர் பற்றி.., குதிரைகளை நேர்த்தியான துணிகளால் அழகுபடுத்தி, காலத்திற்கேற்ற ஆடை உடுத்தாமல் இருக்கும் அயலவரை அலட்சியமாய் நோக்குபவர் பற்றி.., தானியங்கள் உலுத்துப்போக வைத்துவிட்டு, பசித்திருப்பவருக்கு உணவு கொடுக்காதவர் பற்றி..., பணத்தைப் பதுக்கி வைத்துக்கொண்டு, நசுக்கப்படுவரை இழிவாக நோக்குபவர் பற்றி.. நீங்கள் என்ன நினைப்பீர்கள்?"

புனித பேசில் அவர்கள் கேட்ட இக்கேள்வி, தொடக்ககால கிறிஸ்தவர்கள், ஒரு தீவிர எதிர்க்கலாச்சாரத்திற்கு அர்ப்பணித்திருந்தார்கள் என்பதையே காட்டுகின்றது. இக்காலக் கிறிஸ்தவர்கள் பலர் எதிர்கொள்வது போன்று, அக்காலக் கிறிஸ்தவர்களும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பல சவால்களைச் சந்தித்தனர். நற்செய்திப் போதனைகளோடு ஒத்துவரும்வகையில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்தனர். பொது வாழ்வில், தங்களின் விசுவாச வாழ்வைச் செயல்களில் வெளிப்படுத்தினர். கிறிஸ்தவர்கள், "இயேசுவே ஆண்டவர்" என தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு வாழ்ந்தனர் என, புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடல் பிரிவு 10, திருச்சொற்றொடர் 9ல் சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் கிறிஸ்தவர்கள், பாவம், உடல்சார்ந்த இச்சைகள், சாத்தான் போன்ற எதற்கும் ஊழியம் செய்யாமல்,  இயேசுவை மட்டுமே ஆண்டவராகக் கொண்டு வாழ்ந்தனர். ஏனெனில் முதல் நூற்றாண்டுச் சூழலில், உரோமைப் பேரரசில், சீசர் ஒருவர் மட்டுமே ஆண்டவர். இந்தச் செய்தி, அப்பேரரசின் எல்லா இடங்களிலும் நினைவுப்படுத்தப்பட்டது. வருடாந்திர வரி வசூல் நேரத்தில், உரோமைக் குடியுரிமை பெற்ற எல்லாரும், அந்தந்த இடங்களிலுள்ள கோவில்களுக்குச் சென்று, வரியைச் செலுத்தி, சீசரே ஆண்டவர் என அறிக்கையிட்டனர். இவ்வாறு அவர்கள் அறிக்கையிடவில்லையெனில், அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். கிறிஸ்தவர்கள் இதை அறிந்திருந்தும், துணிச்சலாக, இயேசுவே ஆண்டவர் என அறிக்கையிட்டு வந்தனர்.

அக்கால உரோமைப் பேரரசில் நடைபெற்ற ஆண்டு சமயக் கொண்டாட்டங்கள், உரோமைக் கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. பேரரசர் சீசரை வழிபடும் விழாவாகவும்கூட அவை இருந்தன. கிறிஸ்தவர்கள் இந்த விழாக்களில் கலந்துகொள்ள மறுத்தனர். இதனால் அவர்கள் மோசமான குடிமக்கள் அல்லது தேசதுரோகிகள் என முத்திரை குத்தப்பட்டனர். அக்கிறிஸ்தவர்கள் மிகவும் வல்லமையுடைய துரோகிகளாக காட்டப்பட்டு, உரோமை சமூகத்திற்கே அச்சுறுத்தலாக கருதப்பட்டனர். இதுவே, முதல் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் சித்ரவதைப்படுத்தப்பட்டதற்கு காரணமாகும். அரசியல் ரீதியாக எவ்வளவு துன்பங்களை அவர்கள் எதிர்கொண்டாலும், "இயேசுவே ஆண்டவர்" என துணிச்சலாக அறிக்கையிட்டனர். இவ்வாறு, தொடக்ககால கிறிஸ்தவர்கள், தங்களின் இந்த சமய மொழி மற்றும் நடைமுறைகளால், புரிந்துகொள்ளப்படாமையால் துன்புற்றனர்.  சமூகத்தினின்று அல்லது குழுக்களினின்று தனிமைப்படுத்தப்பட்டனர். கிறிஸ்தவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக அல்லாமல், அவர்கள் சரியானதைச் செய்கிறார்கள், அந்தச் சரியான செயல்களும் முக்கியமானவையாக உள்ளன என்பதற்காகவே, உரோமைப் பேரரசின் அதிகாரிகள், அக்கிறிஸ்தவர்களுக்கு அஞ்சினர் எனச் சொல்லப்படுகின்றது. தொடக்ககாலத்தில் கிறிஸ்தவர்கள் ஆற்றிய பல காரியங்களை, இக்காலத்தில் அரசு ஆற்ற வேண்டுமென நாம் அரசை சார்ந்திருக்கின்றோம்.

உரோமைப் பேரரசில் பொதுநலன் என்பது, ஒரு மதிப்பீடாகவே கருதப்படவில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் கருதினார்கள். கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி ஏழைகள் எல்லாரையும் அவர்கள் தொடர்ந்து பராமரித்து வந்தார்கள். ஏழைகள் மீது அக்கறை காட்டுவது, கிறிஸ்தவ மதத்தில் முக்கியமானதாக உள்ளது, அந்நியர்களிடம் அவர்கள் காட்டும் அன்பையும், இறந்தவர்களின் கல்லறைகளை அவர்கள் பராமரிப்பதும், தங்கள் மதத்தின் ஏழைகள் மட்டுமல்லாமல், பிற மதங்களின் மக்களையும் அவர்கள் அன்புகூர்வது... போன்றவைகள் நம்மிடம் இல்லையே என,  உரோமைப் பேரரசர் ஜூலியன் ஒருமுறை சொன்னார் என ஏடுகள் கூறுகின்றன.

இயேசு சொல்லியுள்ளார் “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்.25,40)” என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.