சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

இந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்

தெருவில் வாவ்வோரோடு உரையாடும் திருத்தந்தை பிரான்சிஸ் - REUTERS

14/06/2018 16:29

ஜூன்,14,2018. “இந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார் (தி.பா.34,6)” என்ற தலைப்பில், வருகிற நவம்பர் 18ம் தேதி சிறப்பிக்கப்படும், இரண்டாவது உலக வறியோர் நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தியை, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

கூவியழைத்தல், பதிலளித்தல், சுதந்திரமாக இருத்தல் போன்றவை பற்றி அச்செய்தியில் விளக்கியுள்ள திருத்தந்தை, ஏழைகளின் அழுகுரல்களுக்குத் தெளிவான செயல்கள் வழியாகப் பதிலளிக்கும் விதமாக, உலக வறியோர் நாளைச் சிறப்பிக்குமாறு, உலகலாவியத் திருஅவைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகாரமும், செல்வமும் கொண்டுள்ளவர்களைப் போற்றி அவர்களைப் பின்பற்றி நடப்பதற்கு விரும்பும் உலகம், ஏழைகளை ஒதுக்கி, அவர்களை, வீணானவர்கள் மற்றும் வெட்கத்துக்குரியவர்களாக நோக்குகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, இத்தகைய சிந்தனைகளை மாற்றுமாறு ஏழைகள் விண்ணப்பிக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

தன்னலம், தற்பெருமை, பேராசை, அநீதி ஆகியவற்றால் ஏழ்மை உருவாக்கப்படுகின்றது என்றும், ஏழைகளின் குரல் கேட்கப்படாமல், மௌனமாக்கப்படுகின்றது என்றும், பாதுகாப்பின்மை, நிலையற்றதன்மை, தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையானோர் போன்ற நமது உதவி தேவைப்படும் இவர்களும் புறக்கணிக்கப்படும் ஏழைகள் என்றும், குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.

ஆயர்கள், அருள்பணியாளர்கள், குறிப்பாக, திருத்தொண்டர்கள், துறவிகள், பங்குத்தளங்களில் பல்வேறு திருஅவை இயக்கங்களிலும், கழகங்களிலும் உறுப்பினர்களாக இருக்கின்ற பொதுநிலை விசுவாசிகள் ஆகிய எல்லாரும், இந்த உலக வறியோர் நாளை, புதியவழி நற்செய்தி அறிவிப்புக்கு சிறப்பான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை.

ஏழைகள் நமக்கு நற்செய்தி அறிவிக்கின்றனர், நற்செய்தியின் அழகை ஒவ்வொரு நாளும் கண்டுகொள்வதற்கு அவர்கள் உதவுகின்றனர் என்றும், இந்த அருளின் வாய்ப்பை இழக்காதிருப்போம் என்றும், ஏழைகளுக்கு நாம் கடன்பட்டவர்கள் என, அந்த உலக வறியோர் நாளில் நாம் எல்லாரும் உணர்வோம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.    

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் நிறைவு நிகழ்வில் திருத்தந்தை உருவாக்கிய உலக வறியோர் நாள், திருவழிபாட்டு ஆண்டின் 33ம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது. 2018ம் ஆண்டில், இரண்டாவது முறையாகச் சிறப்பிக்கப்படும் இந்த உலக நாள், வருகிற நவம்பர் 18ம் தேதி இடம்பெறுகின்றது.

புதிய வழி நற்செய்தி அறிவிப்பு அவைத் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா, அந்த அவையின் செயலர், பேரருள்திரு கிரகாம் பெல் ஆகிய இருவரும், இச்செய்தியை வெளியிட்டு, இச்செய்தி பற்றிய தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

14/06/2018 16:29