2018-06-14 15:32:00

இமயமாகும் இளமை : 22 வயது இளம்புயலின் சாதனை


நண்பர்களும் நம்பிக்கையும் இருந்தால் நல்லதே நடக்கும் என்ற நல்லெண்ணத்துடன், 22 வயதில் தொழில்முனைவோராகக் கலக்கிக்கொண்டிருக்கிறார், அஷ்வினி ஸ்ரீநிவாசன். இவர் சென்னை, நங்கநல்லூரில் உள்ள “80 Degrees East – The Food Grid”, எனப்படும் travel themed cafeயின் உரிமையாளர்களில் ஒருவர். இந்த நிலைக்கு உயர்ந்தது பற்றி இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார் அஷ்வினி. நான் பிறந்து, வளர்ந்தது சென்னை. பி.டெக் பொறியியல் படிப்பை முடித்த நேரத்தில், இரு நிறுவனங்களில் வேலை கிடைத்தது. ஆனால், என் நீண்டகால நண்பரான ப்ரனேஷ், அவருடைய திருமண புகைப்பட அலுவலகத்தில் என்னை சேரச் சொன்னார். நானும் சம்மதித்தேன். ஒரு எட்டு மாதம் கழித்து, நாம் ஏன் ஒரு புது உணவகம் ஆரம்பிக்கக் கூடாது?’ என கேட்டார் ப்ரனேஷ்.  ‘முதலில் தயக்கம். என் வீட்டிலும், மற்றவர்களும், எனக்கு 21 வயதுதான் என்பதை ஒரு குறையாகப் பார்த்தார்கள். ப்ரனேஷ் மட்டும் ‘உன்னால் முடியும்’ என்ற நம்பிக்கையைக் கொடுத்தார். ‘சரி, உனக்கு துணிச்சல் இருந்தால், தொடங்கு என, என் பெற்றோரும் சுதந்திரம் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் தொழிலுக்குத் தேவையான முதலீட்டை ப்ரனேஷ் கொடுத்து, பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். நான் நிர்வாகத்தைப் பார்த்துக்கொண்டேன். டிராவல் தீம்டு கஃபே தொழிலை உருவாக்கினோம். அதாவது, வெவ்வேறு நாடுகளின் சிறப்பு உணவுகளை, ஒரே இடத்தில் சாப்பிடுவது மக்களுக்கு எப்பொழுதும் பிடிக்கும் என்பதால், அந்த எதிர்பார்ப்பை அடிப்படையாகக்கொண்டுதான் எங்கள் கஃபேயின் உணவுகளைத் தயார் செய்தோம். உலகின் பல நாடுகளின் பயணங்களின்போது ஈர்க்கிற கான்டினென்டல் சைவ உணவு வகைகள்தான் இவை. எனக்குச் சமைக்கத் தெரியாது. ஆனால், உணவில் நிறை குறைகளைத் துல்லியமாகச் சொல்லத் தெரியும். அதனால் எங்கள் சமையல் குறிப்புகளில் சின்னக் குறை இருந்தால்கூட சரி செய்துவிடுவேன். பொதுவாக, அசைவப் பிரியர்களுக்குத்தான் விதவிதமான ரெசிப்பிகள் (recipe) இருக்கும். அதனால், சைவப் பிரியர்களை மகிழ்விக்கும் விதமான நறுமணமும், காரமும் கலந்த உணவு வகைகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கினோம். சைவப் பிரியர்கள் அதிகமிருக்கிற நங்கநல்லூரில் எங்கள் கஃபேவை தொடங்கினோம். ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. இப்போது தொழிலில் முப்பது விழுக்காடு இலாபம் கிடைக்கிறது. எங்களிடம் பத்து பேர் வேலை செய்கிறார்கள். ‘இந்த வயதில் தொழிலா?’ என, என்னை நம்பிக்கை இல்லாமல் பார்த்தவர்கள் எல்லாம், ‘இந்த வயதிலேயே எப்படி சாதித்துவிட்டாய் பாரு’ என, என் வளர்ச்சியைப் பார்த்து இப்போது வியந்து, பாராட்டுகிறார்கள் என்கிறார் இளம்புயல் அஷ்வினி. ஆம். நல்ல நண்பர்களின் துணை இருந்தால் வெற்றி வெகு தொலைவில் இல்லைதான்.

ஆதாரம் : விகடன் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.