2018-06-15 16:31:00

1493ல் எழுதப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடிதம் வத்திக்கானில்


ஜூன்,15,2018. வத்திக்கான் நூலகத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன, கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவர்கள், 1493ம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் உண்மையான நகல், ஜூன் 14, இவ்வியாழனன்று மீண்டும் வத்திக்கான் நூலகத்திடம் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய கண்டத்தைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவர்கள், தனது பயண அனுபவங்கள் பற்றி, 1493ம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் நகல், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Atlantaவில் பல ஆண்டுகளாக ஒருவரிடம் இருந்தது.

காணாமல்போன இக்கடிதம் பற்றி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் உள்துறை பாதுகாப்பு துறையினரால் விசாரிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், திருப்பீடத்துக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதர் Callista Gingrich அவர்கள், வத்திக்கான் ஆவண காப்பாளர் மற்றும் நூலகப் பொறுப்பாளர் பேராயர் Jean-Louis Bruguès, வத்திக்கான் நூலகத் தலைவர் ஆயர் Cesare Pasini ஆகியோரிடம், இவ்வியாழனன்று ஒப்படைத்துள்ளார்.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவர்கள், அமெரிக்காவுக்குத் தனது பயணத்தை முடித்து திரும்பியவுடன், தனது பயணங்கள் பற்றி 1493ம் ஆண்டில், இஸ்பானிய அரசர் Ferdinand மற்றும் அரசி Isabellaவுக்கு எட்டு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதினார். இக்கடிதத்தின் ஒரு நகல், 1921ம் ஆண்டில், வத்திக்கானுக்கு அளிக்கப்பட்டது.

இக்கடிதத்தின் உண்மையான ஏறத்தாழ எண்பது நகல்கள் இன்றும் ஐரோப்பாவின் பல இடங்களில் உள்ளன. Atlantaவைச் சேர்ந்த, காப்புறுதி கணக்கில் நிபுணரான David Parsons என்பவர், 2004ம் ஆண்டில், நியுயார்க் நகரில் அரிதான புத்தகங்கள் விற்பனையாளர் ஒருவரிடம், இக்கடிதம், வத்திக்கானிலிருந்து திருடப்பட்டது என அறியாமல், 8,75,000 டாலருக்கு அதை விலைக்கு வாங்கினார் என செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.