2018-06-15 16:11:00

ஏராளமானோர் பொருளாதார முன்னேற்றத்திலிருந்து....


ஜூன்,15,2018. வன்முறை, போர்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான மக்கள், வருங்கால பொருளாதார வாய்ப்புகளிலிருந்து ஒதுக்கப்படுகின்றனர் மற்றும் வருங்கால வாழ்வின் மீது நம்பிக்கையையும் இழந்துள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இத்தாலிய குழுவிடம், இவ்வெள்ளிக்கிழமையன்று  கூறினார்.

இத்தாலிய தொழிலதிபர்கள் கூட்டமைப்பு நடத்திய தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட ஏறக்குறைய 600 பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நலிவடைந்துள்ள இம்மக்கள் ஒதுக்கப்பட்டுவிடாமல், அவர்களின் துன்பங்கள் அகற்றப்பட ஆவன செய்யப்படுமாறு கேட்டுக்கொண்டார்.

அம்மக்களின், குறிப்பாக இளையோரின் அடிப்படை மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும், வேலைவாய்ப்பை வழங்காமலும், ஒதுக்கப்பட்டவர்கள் மீது ஆர்வம் குன்றியும் இருக்கும் ஒரு சமுதாயம், படிப்படியாக நலிவடையத் தொடங்கும் என எச்சரித்தார், திருத்தந்தை.

வேலையின்றி இருக்கும் சமுதாயத்தில், சமத்துவமின்மைகள் பலுகிக்கொண்டே இருக்கும் என்றும், எவரையும் ஒதுக்காமல், அனைவரையும் உள்ளடக்கும் மற்றும், தொழிலை மையப்படுத்தாமல், மனிதரை மையப்படுத்தும் ஒரு சமுதாயம் அவசியம் என்றும், இத்தாலிய தொழில்துறை தலைவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.