2018-06-16 15:23:00

அமல மரியின் Theatine அருள்சகோதரிகளிடம் திருத்தந்தை


ஜூன்,16,2018. மண்ணுலகிற்கு உப்பாகவும், உலகிற்கு ஒளியாகவும் விளங்கும் சாட்சிய வாழ்வு, இன்றைய உலகுக்குத் தேவைப்படுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்சகோதரிகள் குழுமம் ஒன்றிடம் இச்சனிக்கிழமையன்று கூறினார்.

வணக்கத்துக்குரிய ஊர்சுலா பெனின்காசா என்பவர், இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் ஆரம்பித்த, அமல மரியின் Theatine துறவற சபையின் நானூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அச்சபையின் ஏறக்குறைய நூறு அருள்சகோதரிகளை, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சபை நிறுவனரின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி, கடவுள் அனுபவத்தை எடுத்துரைப்பவர்களாக வாழுமாறு கேட்டுக்கொண்டார்.

ஒருவரையொருவர் அன்புகூருங்கள், ஒருவரையொருவர் மதித்து நடங்கள், ஒவ்வொருவரும் பிறரின் நலனில் அக்கறை காட்டுங்கள் என்ற, சபை நிறுவனரின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக வாழுமாறு கூறியத் திருத்தந்தை, அன்றாட உணவுக்காக மட்டுமல்லாமல், ஆன்மீக உணவுக்காகவும் ஏங்கும் மக்கள் மீதும் கவனம் செலுத்துமாறு கூறினார்.

இன்றைய உலகில் பலர், வாழ்வு பற்றிய உணர்வை இழந்து, வாழ்வளிக்கும் நல் உணவாகவும், உயிருள்ள தண்ணீராகவும் இருக்கும் இயேசுவைச் சந்திப்பதற்கு, தங்களை அறியாமலே ஏங்குகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, ஆன்மீக ஒன்றிப்பால் வழிநடத்தப்படும் குழு வாழ்வில், உடன்பிறப்பு உணர்வின் சாட்சிய வாழ்வை, இன்றைய உலகம், அருள்சகோதரிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றது என்றும் தெரிவித்தார்.

இவ்வுரையின் இறுதியில், தனக்காகச் செபிக்குமாறு கூறி, தனது ஆசீரையும், அமல மரியின் Teatine துறவற சபை அருள்சகோதரிகளுக்கு வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வணக்கத்துக்குரிய ஊர்சுலா பெனின்காசா என்பவரால், அமல மரியின் Teatine துறவற சபை, இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில், 1583ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.