2018-06-16 16:03:00

ஏமனில் பசி பட்டினியால் 80 இலட்சம் பேர்


ஜூன்,16,2018. வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டு போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளவேளை, விமானநிலையம் அமைந்துள்ள அன்சாய் பகுதியில் இடம்பெற்று வரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களில், எண்பது இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

புரட்சியாளர்கள் மீது, ஏமன் மற்றும் சவுதி அரேபியா கூட்டுப்படைகள், தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன என்றும், ஏமனில் Houthi புரட்சியாளர்களின் பிடியில் உள்ள Hudaydah விமான நிலையத்தைக் ஏமன் படைகள் கைப்பற்றியுள்ளன என்றும், இச்சனிக்கிழமை செய்திகள் கூறுகின்றன.

ஏமன் தலைநகர் சனா விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், ஏறக்குறைய எண்பது இலட்சம் பேர் பசியால் துன்புறுகின்றனர் என ஐ.நா. கூறியுள்ளது.

இச்சண்டையில் ஏமன் அரசுத்தலைவருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. புரட்சியாளர்களுக்கு ஈரான் உதவி வருகிறது. கடந்த சில மாதங்கள் சண்டை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ள உள்நாட்டு போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என செய்திகள் கூறுகின்றன.

சுன்னி பிரிவைச் சேர்ந்த அரசுத்தலைவர் மன்சூர் ஹைதிக்கும், சியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சி படைக்கும் இடையே, கடந்த 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது எனவும், இதில், ஏறத்தாழ பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர், இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் அப்பாவி பொதுமக்கள் எனவும், 55 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் எனவும் ஐ.நா. கூறுகிறது.

ஆதாரம் : Agencies /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.