2018-06-16 15:43:00

ஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்


ஜூன்,16,2018. உங்கள் ஒவ்வொரு நாளின் நடவடிக்கைகளில் தூய ஆவியார் ஓர் அங்கமாக இருப்பதற்கு அவரை அழையுங்கள். ஒவ்வொரு நாளும் பணிகளைத் தொடங்கும்போதும்கூட, தூய ஆவியே, வாரும் என அவரை அழையுங்கள் என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும், தென் இத்தாலியின் கலாபிரியா மாநிலத்தில், Lungro எனும் நகரின் பேராலயத்தில் நடைபெறும், கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்களின் 21வது கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கருத்தரங்கு, ஐரோப்பிய கண்டத்தில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு, மேலும் துணிச்சலான உந்துதலை அளிக்கும் எனக் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் பெயரில், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியில், இக்கருத்தரங்கு, ஆயர்கள் மத்தியில் ஒன்றிப்பையும், குழுஉணர்வையும் ஊக்குவிக்கும் என்ற திருத்தந்தையின் நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய, கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள், கலாபிரியா மற்றும், தென் இத்தாலி முழுவதும், பழங்காலத்தில் அல்பேனியாவிலிருந்து மக்கள் குடியேறியதைக் குறிப்பிட்டார். இக்காலத்திலும், மத்திய கிழக்கில், ஏன் கிழக்கு ஐரோப்பாவிலும் இடம்பெறும் வன்முறைகளால், கிறிஸ்தவர்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறி வருகின்றனர் என்று உரைத்த கர்தினால் சாந்த்ரி அவர்கள், கடந்தகால நூற்றாண்டுகளில், புலம்பெயர்ந்த மக்களை, திருஅவை சிறப்பாக வரவேற்றது மட்டுமல்லாமல், அவர்களின் ஆன்மீக, இறையியல், திருவழிபாடு மற்றும் ஏனையத் தேவைகளையும் நிறைவேற்றியது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.