2018-06-16 15:49:00

புலம்பெயர்ந்தவர் குறித்த வத்திக்கானின் காணொளிக்கு விருது


ஜூன்,16,2018. புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை உலக சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கத்தில், திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவை தயாரித்த குறித்த காணொளி ஒன்றிற்கு, பன்னாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு சமூக விளம்பர விழா எனப்படும் உலகளாவிய அமைப்பு, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின், புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர் துறை தயாரித்த காணொளிக்கு, இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த காணொளித் தயாரிப்புக்கு, Machi சமூகத்தொடர்பு நிறுவனம் உதவியுள்ளது.

இஸ்பெயின் நாட்டு தலைநகர் மத்ரித்தில், இவ்வெள்ளிக்கிழமை இரவில் நடைபெற்ற 12வது விளம்பரவிழா நிகழ்வில், உலகெங்கிலுமிருந்து நிறுவனங்களும், விளம்பரதாரர்களும் கலந்துகொண்டனர்.  

வத்திக்கான் தயாரித்துள்ள இந்த காணொளி மூன்றரை நிமிடம் கொண்டது. புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர்களை வரவேற்று, பாதுகாத்து, ஊக்குவித்து, ஒருங்கிணைப்பதற்கு, அரசுகளும், நிறுவனங்களும், பொது மக்களும் ஆற்றவேண்டிய செயல்கள் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த காணொளியில் பேசியுள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.