2018-06-18 14:00:00

இமயமாகும் இளமை – ஏழைகளுக்கு உதவுவதில் திருப்தி காண்பவர்


“கடவுள் நம்மைப் படைத்ததே நம்மால் முடிந்த அளவுக்கு சிலர் முகத்திலாவது சிரிப்பை வரவைத்து பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். அதைத்தான் நாட்டியம் வழியாக நான் செய்துகொண்டிருக்கிறேன். ஏழ்மையின் கொடுமையை அனுபவித்ததால், ஏழைக்  குழந்தைகளின் முகங்களில் ததும்பும் புன்னகை எவ்வளவு அற்புதமானது என்பது எனக்குப் புரியும்”. இவ்வாறு சொல்பவர் முனைவர் ரேகா.  இவர் தன் 17வது வயதிலேயே நாட்டியப் பள்ளியை ஆரம்பித்ததுதான் மிகச்சிறப்பு. இவர் தனது நாலரை வயதிலேயே புஷ்பாஞ்சலி, வர்ணம், தில்லானா, பதம் போன்ற, முக்கால் மணி நேர நாட்டிய நிகழ்ச்சி செய்திருக்கிறார். இவரது அம்மா ஜெயலக்ஷ்மி குடும்ப நிர்வாகி. அப்பா இராகவன் அவர்களுக்கு பேக்கரி தொழில். இராகவன் அவர்கள், சக்திக்கு மீறி செய்த கடனுதவிகளும், தானதர்மங்களும், குடும்பத்தின் நிதி நிலைமையை இறுக்க ஆரம்பித்தது. கடன் வாங்கினவர்கள் அவரை ஏமாற்ற, ஒரு கட்டத்தில் எல்லா சொத்துக்களையும் ஒவ்வொன்றாக இழந்து, கடைசியாக, மாளிகை மாதிரி இருந்த வீட்டையும் இழந்து, ஒரேயோர் அறை இருக்கிற வாடகை வீட்டுக்குக் குடிபோனார்கள். அரசி மாதிரி இருந்த ரேகாவின் அம்மா வாரக்கூலியாக வேலைக்குப் போனார்கள். தான் ஆசை ஆசையாகக் கற்றுக்கொண்டிருந்த பரத வகுப்பையும் நிறுத்தினார் ரேகா. அப்போது அவருக்கு வயது பத்து. அந்த வயதில் ரேகாவின் மனதிற்குள் ஒரு வைராக்கியம். ஒரு நாட்டிய பள்ளி ஆரம்பித்து, ஏழைக் குழந்தைகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைத்தார் ரேகா. இவர் ‘நிருத்ய தர்ம டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ நாட்டியப்பள்ளி ஆரம்பிப்பதற்கு அதுதான் காரணம். நாளடைவில் ரேகாவின் அப்பா நஷ்டத்தில் இருந்து மீள ஆரம்பித்ததும், மூன்று வருடங்களாக ஒலிக்க மறந்திருந்த சலங்கைகளை மீண்டும் பாதங்களில் கட்டினார் ரேகா. இந்த முறை பரதத்துடன் கேரளாவின் பாரம்பரிய நடனமான மோகினியாட்டத்திலும் ஆர்வம்காட்டி, இரண்டு நடனங்களிலும் அடுத்தடுத்து முனைவர் பட்டம் பெற்றார். வணிக மேலாண்மை படிப்பிலும், முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறார் ரேகா. நாட்டியம் கற்றுக்கொள்ள ஆசைப்படும் ஏழைச் சிறாரைக் கட்டணம் இல்லாமல் தன் பள்ளியில் சேர்த்துள்ள ரேகா, கூடவே ஹெச்.ஐ.வி. நோய்க்கிருமிகள் பாதித்துள்ள சிறாரையும் சேர்த்திருக்கிறார். இதுவரை அந்நோய் பாதித்த முப்பத்தைந்து சிறார்க்கு நாட்டியம் கற்றுக்கொடுத்திருக்கிறார் ரேகா. ஒருசமயம் இரண்டு சிறார், சில நாள்களாக வகுப்புக்கு வரவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் இறந்துவிட்டார்கள் என அறிந்தார் ரேகா. எனவே, இறப்பை எதிர்நோக்கியிருக்கும் அந்தக் சிறாரை, எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குச் மகிழ்வாக வைத்திருப்பேன் என்று சொல்லும் ரேகா,  இந்தச் சிறார்க்கு நாட்டியம் சொல்லித் தருவதற்காகவே, தான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்கிற உறுதியுடன் இருக்கிறார். இப்போது முனைவர் ரேகாவுக்கு வயது முப்பது. 

ஆதாரம் : விகடன் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.