2018-06-18 16:13:00

ஜூன் 23, ஏமனில் அமைதிக்காக செப நாள்


ஜூன்,18,2018. ஏமனில் அமைதி நிலவ வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்திருப்பதை, இதற்குப் பொறுப்பானவர்கள் கவனத்தில் கொள்வார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார், தெற்கு அரேபிய பகுதியின் (ஐக்கிய அரபு குடியரசுகள், ஓமன், ஏமன்) அப்போஸ்தலிக்க பிரதிநிதி ஆயர் Paul Hinder.

Hudaydah துறைமுக நகரைக் கைப்பற்றுவதற்காக சவுதி அரேபிய கூட்டுப்படைகள் கடும் தாக்குதலை நடத்திவரும்வேளை, இச்சூழல் மிகவும் கவலை தருவதாக உள்ளது என்றும், மனிதாபிமானப் பேரிடர் மேலும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ள ஆயர் Paul Hinder அவர்கள், திருத்தந்தை, போரிடம் தரப்புகளை, உரையாடலுக்கு அழைப்பு விடுத்திருப்பது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

ஏமனில் அமைதி நிலவுவதற்காக, ஜூன் 23, வருகிற சனிக்கிழமையை, செபிக்கும் நாளாக, கத்தோலிக்கர் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள ஆயர் Paul Hinder அவர்கள், 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஏடனில் கொல்லப்பட்ட அன்னை தெரேசா சபையின் நான்கு அருள்சகோதரிகள் உட்பட, அந்நாட்டின் கிறிஸ்தவ சமூகத்தில் பலியாகுவோரையும், மறைசாட்சிகளையும் மறக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூன் 17, இஞ்ஞாயிறன்று ஐந்தாவது நாளாக Hudaydahவில் சண்டை இடம்பெற்றவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு மூவேளை செப உரையின்  இறுதியில், ஏமன் நாட்டில் அமைதி நிலவ செபிக்குமாறு விண்ணப்பித்தார்,

Hudaydahவில் இடம்பெறும் வன்முறை மற்றும் பதட்டநிலைகள் பற்றிக் குறிப்பிட்ட ஆயர் Paul Hinder அவர்கள், இந்நிலைகள் அகற்றப்பட, போரிடும் தரப்புகள் மத்தியில் உரையாடலும், ஒப்புரவுமே ஒரே வழி என்றும் கூறியுள்ளார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.