2018-06-18 15:46:00

திருத்தந்தை - இறையாட்சி புதிரான முறையில் வளர்கின்றது


ஜூன்,18,2018. வாழ்வின் இருள்சூழ்ந்த மற்றும் இன்னல்நிறைந்த நேரங்களில், நம்பிக்கையிழக்காமல், நம்மை எப்போதும் காப்பாற்றுகின்ற கடவுளின் பிரசன்னத்தில் ஆழமாய் நம்பிக்கை வைத்து வாழுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று கேட்டுக்கொண்டார்.

இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, முளைத்து தானாக வளரும் விதை, கடுகு விதை ஆகிய இரு உவமைகள்(மாற்.4:26-34) பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முளைத்து தானாக வளரும் விதை உவமையை, இயேசு, இறையாட்சிக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் என்றும், விதைத்தவரின் பராமரிப்பையும் தவிர்த்து, விதை, தானாகத் தளிர்விட்டு, வளர்ந்து, பின் தானியத்தை விளைவிக்கின்றது என்றும் கூறியத் திருத்தந்தை, இவ்வுலகில் இறையாட்சி, இயேசுவின் போதனைகள் மற்றும் செயலால் வளர்கின்றது என்று கூறினார்.

இறையாட்சி, மனித உழைப்பால் வளர்ந்து விரிவடைவதில்லை என்றும், கடவுளின் வல்லமை மற்றும் நன்மைத்தனத்தால் வளர்கின்றது என்றும், இறையாட்சி, புதிரான வகையில் வளர்கின்றது என்றும் உரையாற்றினார் திருத்தந்தை.

இறையாட்சி கடுகு விதைக்கு ஒப்பாகும் என்று, இயேசு கூறிய உவமை பற்றியும் விளக்கிய திருத்தந்தை, முன்னரே நாம் கூறமுடியாத நிலையிலுள்ள கடவுளின் நியதியை ஏற்றுக்கொள்வது நமக்கு எளிதல்ல எனினும், நம் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட விசுவாச வாழ்வை வாழுமாறு இயேசு அழைப்பு விடுக்கிறார் என்று கூறினார்.

கடவுளில் நம்பிக்கை வைத்து, தாழ்மையுடன் அவரிடம் சரணனடைவதில் நாம் துணிச்சலுடன் முன்னோக்கிச் செல்லுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் சிறியவர்கள் மற்றும் பலவீனமான கருவிகள் என்பதை உணர்ந்து, கடவுளின் கரங்களில் நம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் கூறினார்.  

மேலும், இத்திங்களன்று வெளியிடப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், ஒவ்வொரு சூழலிலும், இயலக்கூடிய எல்லா வகைகளிலும், இறையாட்சியின் மகிழ்வை வெளிப்படுத்த முயற்சிப்போம் என்ற சொற்கள் வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.