2018-06-19 09:52:00

இமயமாகும் இளமை - ‘தொழில்நுட்பத்தின் உண்மை முகம்’


‘தி இந்து’ நாளிதழில் வெளியான ஒரு செய்திக் கட்டுரையின் சுருக்கம் – மார்ச் 9, 2108

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என்பது பழமொழி. அதுபோல, இணையத்துக்கு அடிமையானவர்களை மீட்கும் பணியை, இணையவாசிகளே துவங்கியுள்ளனர். ஆம், கூகுள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள், இளையோரை மீட்கும் பணியில் களமிறங்கியுள்ளனர். இதற்காக ‘தொழில்நுட்பத்தின் உண்மை முகம்’ என்ற பெயரில் ஒரு விழிப்புணர்வு முயற்சியை, இவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

இன்றைய வளர்இளம் பருவத்தினர் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகிவிடுவதால், குடும்ப உறவுகளுக்குள் இருக்க வேண்டிய அத்தியாவசிய பண்புகள் குறைந்துவருகின்றன என்று, மனநல அறிஞர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் பாதிப்புகளைத் தடுப்பதே ‘தொழில்நுட்ப உண்மை முகம் என்ற முயற்சியின் முதன்மைக் குறிக்கோள்.

பன்னாட்டளவில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி வளர்இளம் பருவத்தினர் சராசரியாகத் தினமும் 9 மணி நேரத்தைச் சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவதில் செலவிடுகின்றனர் என்று ‘காமன் சென்ஸ்’ (Common Sense) என்ற நிறுவனம் கூறியுள்ளது. நண்பர்களுடன் மேற்கொள்ளப்படும் ‘சாட்டிங்’ ஒரு பக்கம் நடைபெறும் அதேநேரம், சமூக வலைத்தள நிறுவனங்கள் மேற்கொள்ளும் பல மறைமுக முயற்சிகளுக்கும் வளர்இளம் பருவத்தினர் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்பது, இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

“வளர்இளம் பருவத்தில் உருவாக வேண்டிய உணர்வுசார் நுண்ணறிவு, அறிவாற்றல் வளர்ச்சி, சமூகத்தின் மீது உருவாகவேண்டிய பிணைப்பு போன்றவற்றைச் சமூக வலைத்தளங்கள் கொள்ளையடித்துவிடுகின்றன” என்று எச்சரிக்கிறார், ‘காமன் சென்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை உரிமையாளர், ஜேம்ஸ் ஸ்டேயர். சிகரெட், பான் மசாலா போன்ற பொருட்களின் மேல் கட்டாயமாக அச்சடிக்கப்படும் எச்சரிக்கைகளைப் போல், சமூக வலைத்தளங்களும் தங்கள் அறிமுகப் பக்கத்தில், எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும் என்ற குரல், சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.