சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம்: புனித வனத்து அந்தோனியார் - 1

புனித வனத்து அந்தோனியார் - RV

20/06/2018 15:02

ஜூன்,20,2018. உரோமைப் பேரரசர் மகா கான்ஸ்ட்டைன்(Constantine the Great) அவர்களும், பேரரசர் முதலாம் லிசினியுஸ்(Licinius I) அவர்களும் கி.பி.313ம் ஆண்டில், மிலானில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, உரோமைப் பேரரசில், கிறிஸ்தவர்களுக்கு வழிபாட்டு உரிமை வழங்கப்பட்டது. இதன் வழியாக, உரோமைப் பேரரசில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் நிறுத்தப்பட்டன. அதற்குப் பின்னர் திருஅவையில் அமைதி நிலவியது. உரோமைப் பேரரசர் திருஅவையின் பெரிய அறங்காவலரானார். கி.பி.380ம் ஆண்டில், உரோமைப் பேரரசில், கிறிஸ்தவம் அரசு மதமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, உரோமைப் பேரரசு முழுவதும் புதிய ஆலயங்களும், துறவு சபைகளும் எழும்பின. பலர் துறவறம்பூண்டு வீடுகளிலே துறவு வாழ்வு நடத்தினர். மேலும் பலர், மலைகளுக்கும், காடுகளுக்கும், பாலைநிலங்களுக்கும் சென்று தவ வாழ்வை மேற்கொண்டனர். அவ்வாறு வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் புனித வனத்து அந்தோனியார். இவர், கி.பி.251ம் ஆண்டில், எகிப்து நாட்டின் கோமா என்ற ஊரில், செல்வம் கொழித்த பண்ணையார் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு 18 வயது நடந்தபோது, இவரின் திருமணமாகாத சகோதரியை இவரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, இவரின் பெற்றோர் இறந்துவிட்டனர். அதற்குப் பின்னர், ஒருநாள் அந்தோனியார்,  “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மத்.19:21)” என்ற இயேசுவின் திருச்சொற்களை வாசிக்கக் கேட்டார். இதைக் கேட்ட அவர், இயேசுவின் இந்நற்செய்தி அறிவுரைப்படி வாழ முடிவெடுத்தார். 

அக்காலத்தில், கிறிஸ்தவப் பெண்கள் திருமணமாகாமல், குழுவாக சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களோடு தன் சகோதரியை சேர்த்துவிட்டார் வனத்து அந்தோனியார். தன் குடும்பநிலங்களில் சிலவற்றை, அயலவர்களிடம் கொடுத்தார். எஞ்சியிருந்ததை விற்று, ஏழைகளுக்கென தானமாக அளித்தார். பின்னர் கடும்துறவு வாழ்வு வாழத் தீர்மானித்த அவர், அப்பகுதியில் வாழ்ந்த ஒரு துறவியின் சீடராக, பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தார். அந்தச் சமயத்தில், வனத்து அந்தோனியார், பன்றிகள் மேய்க்கும் தொழிலைச் செய்தார் எனச் சொல்லப்படுகின்றது. பின்னர் அவர், எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியாவுக்கு மேற்கே, ஏறத்தாழ 95 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மேற்கு பாலைநிலத்தின் விளிம்பிலுள்ள Nitrian பாலைநிலத்திற்குச் சென்று 13 ஆண்டுகள் வாழ்ந்தார். புனித வனத்து அந்தோனியார்தான், பாலைநிலம் சென்று வாழ்ந்த முதல் துறவி எனவும், பாலைநிலத்தில் தனியாக வாழும் வாழ்வை ஆரம்பித்து வைத்தார் எனவும் சிலநேரங்களில் சொல்லப்படுகிறது. ஆயினும், இவருக்குமுன்னே சிலர், இவ்வாறு கடும் துறவு வாழ்வை வாழ்ந்தனர் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். கிறிஸ்தவ துறவி தேக்ளா போன்றவர்கள், நகரங்களின் ஒதுக்குப்புறங்களில் கடும் துறவு வாழ்வை வாழ்ந்துள்ளனர். புனித வனத்து அந்தோனியார் அவர்களின் வாழ்வு பற்றி எழுதியுள்ள புனித அத்தனாசியுஸ் அவர்கள், பாலைநிலத்தில் அந்தோனியாரை, சாத்தான் கடுமையாய் சோதித்தது எனக் குறிப்பிட்டுள்ளார். சோர்வு, களைப்பு, சோம்பல் போன்றவற்றையும் கொடுத்து சோதித்த சாத்தான், அழகிய பெண்களாக வந்தும் அவரைச் சோதித்துள்ளது. புனித வனத்து அந்தோனியார், செபத்தின் வல்லமையால் சோதனைகள் அனைத்தையும் வென்றார். பின்னர், புனித வனத்து அந்தோனியார் பாலைநிலத்தைவிட்டு, ஒரு கல்லறையில் சென்று தன்னையே தனிமைப்படுத்தி வாழ்ந்தார். அந்தப்பகுதி கிராம மக்கள் கொண்டுவந்த ரொட்டியையும், தண்ணீரையும் உண்டு வாழ்ந்தார். இவரின் கடும் தவவாழ்வு, அவரின் ஆழ்ந்த செபம் ஆகியவற்றால் பொறாமை கொண்ட சாத்தான், அவரை பலநேரங்களில் இரக்கமற்று அடித்து, நினைவற்ற நிலைக்கு விட்டுச் சென்றது. அவரைப் பார்க்க வந்த கிராமத்தினர் அவரின் இந்நிலையைக் கண்டு, அருகிலிருந்த ஆலயத்திற்கு அவரைத் தூக்கிச் சென்றனர். அந்நிலையிலிருந்து குணமடைந்த வனத்து அந்தோனியார், மீண்டும் வெகுதொலைவில் இருந்த நைல் பகுதி பாலைநிலத்திற்குச் சென்றார். அங்குப் பாழடைந்த உரோமையரின் கோட்டையில் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் வாழ்ந்தார்.  புனித அத்தனாசியுஸ் அவர்களின் கூற்றுப்படி, வனத்து அந்தோனியாரை சாத்தான் இங்கும் விட்டுவைக்கவில்லை. நரிகள், சிங்கங்கள், பாம்புகள், தேள்கள் போன்ற கொடிய காட்டு விலங்குகளால் சாத்தான், வனத்து அந்தோனியாரைச் சோதித்தது. அவைகள் அவரை தாக்கப்போவது போலவும், துண்டு துண்டாக வெட்டப்போவது போலவும் சோதித்தன. அவ்வேளைகளில் புனித வனத்து அந்தோனியார், அவைகளைப் பார்த்து நக்கலாகச் சிரித்து, உங்களில் யாருக்காவது என்மேல் அதிகாரம் இருந்தால், என்னோடு போராடுவதற்கு உங்களில் ஒருவரே போதுமானது என்று கூறினார். அவ்வாறு புனிதர் சொன்னவுடன் அவைகள், புகைகள் போன்று மறைந்தன. இந்தப் பாழடைந்த கோட்டையில் இருந்தபோது, ஒரு சிறு இடுக்கு வழியாகவே, வெளியுலகத்திடம் தொடர்புகொண்டார். மக்கள் உணவு கொண்டுவந்து இதன் வழியாகக் கொடுத்தபோது சில வார்த்தைகளையே பேசினார் புனிதர். இவர் ஆறுமாதத்திற்குத் தேவையான உணவைத் தயாரித்தார். தனது இருப்பிடத்திற்கு யாரையும் இவர் அனுமதிக்கவில்லை. இவரிடம் ஆலோசனையும், அறிவுரையும் கேட்பதற்கு வந்தவர்கள் எல்லாரும் வெளியே நின்றுதான் கேட்டார்களாம்.

புனித வனத்து அந்தோனியார் வாழ்நாள்களை வீணாக்கிவிட்டார் என எண்ணிய கிராம மக்கள், அவரைப் பார்க்காமல் இருந்ததால், பொறுமையிழந்து ஒருநாள் இவர் தங்கியிருந்த கோட்டைச் சுவரை உடைத்து உள்ளே சென்றனர். இவர் தனிமை வாழ்வு, இவரைப் பைத்தியமாக ஆக்கியிருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ நல்ல உடல்நலத்துடன் அமைதியாக, ஒளிபெற்றவராகக் காணப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

20/06/2018 15:02