2018-06-20 15:27:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுபயணத்திற்காகச் செபியுங்கள்


ஜூன்,20,2018. இவ்வியாழக்கிழமையன்று தான் மேற்கொள்ளும் ஜெனீவா கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுபயணத்திற்காகவும், தனக்காகவும் செபிக்குமாறு, இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இப்புதன் காலையில், கடவுளின் கட்டளைகள் பற்றி, பலமொழிகளில் பொது மறைக்கல்வியுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெர்மன் மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்துகையில், தனது ஜெனீவா திருத்தூது பயணத்திற்காகச் செபிக்குமாறு கூறினார்.

மேலும், WCC  எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் தொடங்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜூன் 21, இவ்வியாழனன்று ஜெனீவாவுக்கு ஒருநாள் திருத்தூதுபயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிக்கு வெளியே, 23வது திருத்தூதுபயணமாக அமைகின்ற, ஜெனீவா கிறிஸ்தவ ஒன்றிப்பு பயணத்தில், அந்நகரிலுள்ள Bossey கிறிஸ்தவ ஒன்றிப்பு நிறுவனத்தையும் பார்வையிடுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெனீவா நகரிலிருந்து ஏறக்குறைய 25 கிலோ மீட்டர் தூரத்தில் கிராமப்புறத்தில் அமைந்திருக்கின்ற Bossey கிறிஸ்தவ ஒன்றிப்பு நிறுவனம், 1946ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. உலகின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக்கொண்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் இந்நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

இவ்வியாழன் காலை 10.10 மணிக்கு ஜெனீவா பன்னாட்டு விமான நிலையத்தை அடையும் திருத்தந்தையை, சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் Alain Berset அவர்கள் வரவேற்று, விமான நிலையத்திலேயே அவருடன் சிறிதுநேரம் கலந்துரையாடுவார்.

பின்னர், முற்பகல் 11.15 மணிக்கு, உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் மையத்தில் நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாட்டில் கலந்துகொண்டு மறையுரையாற்றுவார் திருத்தந்தை.  

மாலை 3.45 மணிக்கு உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் மையத்தில் நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில் உரையாற்றும் திருத்தந்தை, ஜெனீவா Palexpo மையத்தில் திருப்பலி நிறைவேற்றுவார். அதன்பின்னர் உரோம் நகருக்குப் புறப்பட்டு, இரவு 9.40 மணிக்கு உரோம் சம்ப்பினோ விமானநிலையம் வந்துசேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

WCC மன்றம், ஏறக்குறைய 350, பிரிந்த கிறிஸ்தவ சபைகள், ஆர்த்தடாக்ஸ் சபைகள் மற்றும் ஆங்லிக்கன் சபைகளை உறுப்புகளாகக் கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ ஐம்பது கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.