2018-06-20 15:44:00

பிலிப்பைன்சில் இடம்பெறும் கொலைகளுக்கு எதிராக கத்தோலிக்கர்


ஜூன்,20,2018. பிலிப்பைன்ஸ் நாட்டில் பரவலாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பொதுவில் பேசுமாறு கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளனர் ஆயர்கள்.

அருள்பணியாளர்கள் உட்பட, அந்நாட்டில் அண்மை மாதங்களில் இடம்பெற்ற கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூன் 18, இத்திங்களன்று, "பரிகார நாள்"  கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட ஏராளமான கத்தோலிக்கருக்குத் திருப்பலி நிறைவேற்றிய, மனிலாவின் துணை ஆயர் Broderick Pabillo அவர்கள், நாம் எல்லாரும் பேசினால், நம் குரல்கள் எதிரொலிக்கும் மற்றும் அது நாடு முழுவதும் கேட்கும் என்று கூறினார்.

பொய்களும், தீய வார்த்தைகளும் இனிமேல் வேண்டாம், சட்டத்திற்குப் புறம்பே நடத்தப்படும் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று மறையுரையில் கூறிய ஆயர் Pabillo அவர்கள்,  இவ்வளவு உரிமை மீறல்களுக்கு மத்தியில் திருஅவை ஏன் அமைதியாக இருக்கிறது என்று மக்கள் கேட்கின்றனர் என்று உரைத்தார்.

திருஅவையின் மக்கள் துப்பாக்கிகளைக் கொண்டிருக்க வேண்டுமென, பொது மக்கள் எதிர்பார்ப்பதில்லை, ஆனால், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர் குழுக்கள் ஆகியோர் உரக்கப் பேச வேண்டுமென எதிர்பார்க்கின்றனர் என்று கூறினார், ஆயர் Pabillo.  

அடக்குமுறையாளர்களால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை நாம் பயன்படுத்தாமல் இருப்போம், அதேநேரம், அரசுத்தலைவர் மாளிகையிலுள்ள தீய ஆவியை, விசுவாசம் நிறைந்த செபத்தின் வழியாக விரட்டுவோம் என்றும், மனிலா துணை ஆயர் கூறினார்.  

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.