சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

ஜெனீவா திருத்தூதுபயணத்திற்கு திருத்தந்தை நன்றி

ஜெனீவாவிலிருந்து விடைபெறும் திருத்தந்தை பிரான்சிஸ் - REUTERS

22/06/2018 16:33

ஜூன்,22,2018. இவ்வியாழனன்று ஜெனீவாவுக்கு மேற்கொண்ட ஒரு நாள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுப்பயணத்தின் நிறைவு நிகழ்வாக, சுவிட்சர்லாந்து நாட்டின் கத்தோலிக்க சமூகத்திற்குத் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஒரு நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இவற்றில் கலந்துகொண்ட எல்லாருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஜெனீவாவின் Palaexpo மையத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, சுவிட்சர்லாந்து ஆயர் பேரவைத் தலைவரும், Lausanne, Genève மற்றும் Fribourg ஆயருமான, Charles Morerod அவர்களுக்கும், அந்நாட்டின் ஏனைய ஆயர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்தும் வந்திருந்த கத்தோலிக்கருக்கும் நன்றி தெரிவித்தார். சரியாக அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் ஜெனீவாவில் தங்கினார் என்பதை நினைவுபடுத்தி, ஜெனீவா மக்களுக்கு தன் நன்றியையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டில் நூறாம் ஆண்டை நிறைவு செய்யும், ILO எனப்படும், ஐ.நா.வின் உலக தொழில் நிறுவனம் உட்பட, பல முக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையிடமாக ஜெனீவா அமைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, தன்னை ஜெனீவாவுக்கு அழைத்த சுவிஸ் கூட்டமைப்பு அரசுக்கும், அந்த அரசின் சிறந்த உதவிக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.  

WCC எனப்படும் கிறிஸ்தவ சபைகள் மன்றம் தொடங்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டை முன்னிட்டு, ஜூன் 21, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெனீவாவுக்கு ஒரு நாள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுப்பயணத்தை மேற்கொண்டார்.  

மேலும், Palaexpo மையத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பு மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய பாதை பற்றி மறையுரையாற்றினார்.

இயேசு கற்றுக்கொடுத்த வானகத்தந்தையை நோக்கிய செபத்திலிருந்து, நம் தந்தை, உணவு, மன்னிப்பு ஆகிய மூன்று சொற்களை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, ஒன்றிப்பை நோக்கிய பாதைக்கு மன்னிப்பு அவசியம் என்று கூறினார்.

ஜெனீவா பயணத்தை நிறைவு செய்து வத்திக்கான் திரும்பியபோது, உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று அன்னை மரியாவுக்கு நன்றியும் தெரிவித்தார்,திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

22/06/2018 16:33