2018-06-22 10:47:00

திருத்தந்தை : தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்


ஜூன்,21,2018. அன்பு சகோதர சகோதரிகளே, மோதல்களையும் பிரிவினைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த கலாத்தியர்களை நோக்கி, தூய பவுல் 'தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்' எனக் கூறும் பகுதியை சற்று முன் இங்கு வாசிக்கக் கேட்டோம். வாழ்வு என்பது அனைத்தையும் தன்னுள்ளே கொண்டதல்ல, அதேவேளை, உன்னதமான ஒன்றை நோக்கி முன்னோக்கி நடந்து செல்வதாகும் என்பதையே இந்த நடந்து செல்லல் குறிப்பிடுகின்றது. நடத்தல் என்பது ஓர் ஒழுங்குமுறை. அதற்கு முயற்சிகள் தேவைப்படுகின்றன. அந்த முயற்சியில் பொறுமை என்பது முக்கியமானது. இந்த பாதையில் நம் நோக்கமானது எப்போதும் முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும். வாழ்வில் நம் உன்னத நோக்கத்தை நோக்கி நடந்து செல்கையில், தாழ்ச்சி உணர்வும், தொடர்ந்த மனமாற்றமும் அவசியமாகின்றன. ஆனால், தங்களைவிட்டு வெளியே வரும்போதுதான் உண்மையான மகிழ்ச்சியையும் அமைதியையும் கண்டுகொள்ள முடியும் என்பதை புரிந்துகொள்ளாமல், பலர், தற்காலிக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கூட்டுக்குள்ளேயே முடங்கி விடுகின்றனர்.

நாம் நம் பயணத்தை வெளியில் தொடர வேண்டும் என்றுதான் துவக்க காலத்திலிருந்தே இறைவன் விரும்புகிறார். ஆபிரகாம், மோசே, பேதுரு, பவுல் என பலரின் வாழ்வில் இதனைப் பார்க்கிறோம். இயேசுவே இதற்கு ஓர் உயரிய எடுத்துக்காட்டாகவும் உள்ளார். ஏனெனில், அவரே நம் வழி. நம்மிடையே நடந்துசெல்ல தன் தெய்வீக நிலையிலிருந்து இறங்கி வந்தவர் அவர்.

நம் திருமுழுக்கின் வழியாக திறக்கப்பட்ட தூய ஆவியாரின் பாதையில் நாம் நடைபோடாமல், நம் ஊனியல்பின் ஆசைகளுக்கு இயைந்த வகையில் நடைபோட்டோமென்றால், நுகர்வுக் கலாச்சாரத்திற்கு நாம் அடிமையாகி விடுவோம். அப்போது கடவுளின் குரல் நம் காதுகளுக்கு மங்கிப்போய்விடும். இத்தகைய வேளைகளில் இறைவனின் படைப்புகள் என்பவை, நம் தேவைகளை நிறைவேற்ற மட்டுமே என்ற எண்ணம் வலுப்பெற்றுவிடும்.

தூய ஆவியாரில் நடைபோடுவது என்பது, உலகப்போக்குகளை மறுதலிப்பதைக் குறித்து நிற்கின்றது. அதேவேளை, 'உங்களை அன்புகூர்வதுபோல், உங்கள் அயலாரையும் அன்புகூர்வாயாக' என்ற பெயர்ப் பலகையுடன் கூடிய பாதையாக இது உள்ளது.

கடந்த காலங்களில் கிறிஸ்தவர்களிடையே பிரிவினைகள் உருவாவதற்கு, உலக மனப்போக்கு உட்புகுந்ததும் ஒரு காரணமாகும். கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது, இழப்பில் தன் வெற்றியைக் காண்கிறது. ' தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார் (லூக்., 9:24) என இயேசுவே கூறியுள்ளார். இந்தப் பாதையில்தான் இயேசுவின் திராட்சைத் தோட்டம் கனிகளைக் கொடுக்கின்றது. உலக கிறிஸ்தவ அவை சிறப்பிக்கும் இந்த 70ம் ஆண்டில், நம் ஒன்றிப்பின் பாதையைப் பலப்படுத்தவேண்டும் என தூய ஆவியாரை நோக்கி வேண்டுவோம். ஒன்றிணைந்து நடப்போம், செபிப்போம், பணிகளை ஆற்றுவோம். நாம் பின்பற்ற அழைக்கப்படும் பாதை இது. இந்த பாதையின் தெளிவான நோக்கம் ஒன்றிப்பாகும். நான் இங்கு அமைதி மற்றும் ஒன்றிப்பின் திருப்பயணியாக வந்துள்ளேன். நாம் ஒன்றிணைந்து நடப்பது என்பது, நம்முடைய நிலைகளைப் பலப்படுத்த அல்ல, மாறாக, இறைவனுக்கு கீழ்ப்படிவதற்கும், இவ்வுலகின் மீது கொண்ட அன்பிற்குமாகும். இயேசுவின் சிலுவை நம்மை வழிநடத்தட்டும். இயேசுவில், பிரிவினைச் சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளன, பகைமைகள் வெற்றி கொள்ளப்பட்டுள்ளன. அவரின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது. இவ்வாறு தன் மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.