2018-06-25 15:24:00

இமயமாகும் இளமை – பெண்மைக்கு மதிப்பளிக்கும் புகைப்படங்கள்


வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். நாம் சந்திக்கும் மனிதர்கள் தொடங்கி, கணக்கின்றி எடுத்துத் தள்ளும் செல்ஃபிவரை எல்லாவற்றுக்கும் சிரிக்கிறோம். ஆனால் இந்தச் சிரிப்புகளில் எதார்த்தம் எப்போதும் இருப்பதில்லை. இந்த நிலையில், நவீன் கவுதம் என்கிற இளைஞர், உயிரும் உணர்வும் சுமந்த புன்னகையை மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்கிறார் என அறிந்தோம். திருவாரூர் அருகில் இருக்கிற நீடாமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த இவர், கணனி பொறியில் பட்டதாரி. படிப்பு முடிந்ததும் ஐ.டி வேலையில் சேர்ந்தார். ஆனால், குடும்பச் சூழலால் அந்த வேலையைத் தொடர முடியாமல், தற்போது, தன் அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் செய்துவருகிறார். நவீன். சிறுவயதில் அவரின் அப்பா புகைப்பட கருவியில் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து, அவருக்கும் அதில் ஆர்வம் முளைவிடக் கிளம்பியது. தற்போது விவசாயம் பார்த்துக்கொண்டே, `சுயம்’ என்கிற பெயரில் இவர் எடுக்கும் புன்னகைப் படங்கள், பெண்மைக்கு மரியாதை செய்பவைகளாக உள்ளன. `Chennai Weekend Clickers.’ என்ற குழு, புகைப்படம் எடுக்கும் நிபுணங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்குப் பயிற்சியளிக்கும் களம். அதில் இணைந்து புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கிய நவீன், இன்ஸ்டாகிராம் பிரபலமாகத் ஆரம்பித்ததும் `இன்ஸ்டா ஃபெஸ்ட்’ என்ற ஒரு போட்டிக்கான அறிவிப்பைப் பார்த்து அதில் போட்டியிட்டார். ஒருவர் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து முப்பது நாள்களுக்கு தினமும் ஒரு புகைப்படத்தை வெளியிடவேண்டுமென்பது அந்தப் போட்டி. கடந்த ஆண்டு கடல் காதலன்’ என்ற தலைப்பில், மெரினா பற்றிய படங்களை எடுத்தார். இந்த ஆண்டு போட்டிக்கான தலைப்பு பற்றி சிந்திக்கையில், வண்ணதாசன் அவர்களின், `தானாய் முளைத்த செடி, யாரோ வீசிய விதையிலிருந்து தானே’ என்ற கவிதை ஞாபகத்திற்கு வர, பெண்களும் அப்படித்தான் சுயம்புகளாக இருக்கிறார்கள் என்று எண்ணினார். எனவே பெண்மைக்கு மரியாதை சேர்க்கிற வகையில் `சுயம்பு’ என்ற தலைப்பில் முப்பது நாள்களும் தினமும் ஒரு பெண்ணின் புன்னகையைப் பதிவு செய்தார். ஆனால், அந்த முப்பது நாள்களோடு நிறுத்திக்கொள்ளாமல், புன்னகைக்கும் சிறுமிகள், பெண்கள் போன்ற, பெண்கள் புகைப்படங்களைத் தொடர்ந்து எடுத்து வருகிறார் இளைஞர் நவீன். பெண்கள் எல்லாரும் அழகானவர்கள். அவர்களின் சிரிப்பும் மகிழ்ச்சியும் இன்னும் அழகானவை. அதை அவர்களுக்கு நிரந்தரமாக்க முடியவில்லை என்றாலும் என் வழியாக ஒரு நாளாவது அவர்களைச் சிரிக்க வைப்பதை மகிழ்வாகச் செய்றேன் என்கிறார் நவீன்.

ஆதாரம் : விகடன் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.