2018-06-26 15:37:00

சித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப்பு


ஜூன்,26,2018. சித்ரவதைப்படுத்துதல், சாவான பாவம் என்றும், சித்ரவதையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு கிறிஸ்தவ சமூகங்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று, தன் டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சித்ரவதைக்குப் பலியானவர்க்கு ஆதரவளிக்கும் உலக நாள், ஜூன் 26, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டவேளை, திருத்தந்தையும் தன் டுவிட்டரில், சித்ரவதையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, கிறிஸ்தவ சமுதாயம் உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த உலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், நாடுகளின் அவசரகால நிலைகள், நிலையற்ற அரசியல் சூழல் உட்பட, எல்லா நேரங்களிலும், ஏன் போரின்போதுகூட, சித்ரவதைப்படுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படவோ மற்றும் நியாயப்படுத்தப்படவோ  முடியாதது என்று கூறியுள்ளார்.

சித்ரவதைப்படுத்துதல், உலகளாவிய சட்டத்தின்கீழ் குற்றமாகும் என்றும், இது எல்லாச் சூழல்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ள ஐ.நா. நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 26ம் நாளன்று இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படும் என, 1997ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதியன்று அறிவித்தது.  

உலகில் சித்ரவதைக்கு உள்ளாகும் இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதில், உறுப்பு நாடுகளும், பொது மக்கள் சமுதாயமும், தனியாட்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு, இந்த உலக நாளில் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.