2018-06-26 15:23:00

திருத்தந்தை, ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் மக்ரோன் சந்திப்பு


ஜூன்,26,2018. பிரான்ஸ் நாட்டு அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்து பேசினார், ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் மக்ரோன்.

திருப்பீடத்திற்கும், பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே தொடர்ந்து நிலவும் நல்லுறவுகள், சிறப்பாக, அந்நாட்டில் தலத்திருஅவையின் பணிகள், நாட்டின் பொது நலனை ஊக்குவிப்பதில் மதங்களின் பங்கு போன்ற தலைப்புகள், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.  

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தவர் பாதுகாப்பு, போர்களை நிறுத்துதல், குறிப்பாக, ஆயதக்களைவு, மத்திய கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் இடம்பெறும் சண்டை போன்ற உலகாளவிய விவகாரங்கள், ஐரோப்பிய திட்டம் போன்றவையும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்றும், திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.  

ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் மக்ரோன் அவர்கள், தன் குடும்பத்தினருடன் திருத்தந்தையைச் சந்தித்து பரிசுப்பொருள்களையும் பரிமாறிக்கொண்டார்.

மேலும், தங்கள் பணிகளை நிறைவு செய்யும், திருப்பீடத்தின் ஜெர்மன் நாட்டுத் தூதர் Annette Schavan, திருப்பீடத்தின் மலேசியா நாட்டுத் தூதர் Bernard Giluk Dompok, திருப்பீடத்தின் கொலம்பியா நாட்டுத் தூதர் Julio Aníbal Riaño Velandia ஆகிய மூவரையும், இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.