2018-06-26 16:09:00

பன்னாட்டு கூட்டுநிறுவனங்கள் மனிதஉரிமைகளை மதிக்க திருப்பீடம்


ஜூன்,26,2018. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெறும், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 38வது கூட்டத்தில், பன்னாட்டு கூட்டுநிறுவனங்களும், மனித உரிமைகளும் என்ற தலைப்பில், திருப்பீடத்தின் சார்பில் இத்திங்களன்று உரையாற்றினார், பேராயர் இவான் யுர்க்கோவிச்.

பன்னாட்டு கூட்டுநிறுவனங்களின் செயல்பாடுகள், அறநெறியின்படி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றும், இதனால், வெறும் பொருளாதார இலாபத்தை மட்டும் நாடாமல், மனித மாண்பை மதிப்பதன் வழியாக, தரமான வாழ்க்கைத் தரம் அமையும் என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள் உரையாற்றுகையில், தொழில் நடவடிக்கைகளில், சமூகங்கள் மற்றும் அவற்றின் உரிமைகள் முழுவதுமாக மதிக்கப்படுவது குறித்த உரையாடல்கள் இடம்பெறும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இணைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

நம் சமூகங்கள் வளமுடன் வாழ்வதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இன்றியமையாதது என்றுரைத்த பேராயர், தொழில் மற்றும் மனித உரிமைகள் குறித்த உலகளாவிய சட்ட அமைப்பில், சுற்றுச்சூழல் சுரண்டப்படாமல் பாதுகாக்கப்படுவதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.