2018-06-26 15:48:00

போதைப்பொருள் ஒழிப்பு நாளுக்கு கர்தினால் பரோலின் செய்தி


ஜூன்,26,2018. உலக போதைப்பொருள் ஒழிப்பு நாள், ஜூன் 26, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

போதைப்பொருள் வர்த்தகம், ஒரு தீமை எனவும், இது ஒவ்வொரு மனிதரின் மாண்பு மற்றும் சுதந்திரமான செயல்பாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், பல குடும்பங்களைச் சீரழிக்கும் இந்நடவடிக்கை வன்மையாய்க் கண்டிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருளால் இளையோர் மிக எளிதாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முக்கியம் எனினும், இதற்குப் பலியாகும் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது சமுதாயத்தின் கடமை என்பதையும், கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு மனிதரின் வாழ்வு, தீய பழக்கங்கள், போதைப்பொருள்கள் மற்றும் வேறு எந்த முறைகளிலும் பேரிழப்பைச் சந்தித்திருந்தாலும், அவ்வாழ்வு முழுவதும் முட்களும், புதர்களும் நிறைந்திருந்தாலும், அதில் நல்ல விதைகள் வளருவதற்கு எப்போதும் வழி உண்டு என்பதில் நம்பிக்கை வைக்குமாறும் கூறியுள்ளார், கர்தினால் பரோலின்.

உலகளாவிய போதைப்பொருள் விவகாரம் பற்றி 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2015ம் ஆண்டில் உலகில், ஏறக்குறைய 25 கோடிப் பேர் போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர் மற்றும் இவர்களில் 2 கோடியே 95 இலட்சம் பேர், இப்பயன்பாட்டால் ஏற்பட்ட பிரச்சனைகளால் துன்புற்று வருகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இவர்களில் 1 கோடியே 20 இலட்சம் பேர், போதைப்பொருள் ஊசியை பயன்படுத்தியவர்கள் எனவும், இவர்களில் பாதிக்கு மேற்பட்டோர், ஹெப்பாடைட்டஸ் சி நோயால் தாக்கப்பட்டுள்ளனர் எனவும், அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.